இளைஞர்களின் கனவுகளை சிதைத்து வருகிறது பாஜக: மல்லிகார்ஜுன கார்கே

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இளைஞர்களின் கனவுகளை சிதைத்து வருவதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர் மின்கம்பத்தின் மீது ஏறி, பேச முயன்றார். இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு எக்ஸ் சமூக வலைதளத்தில் இன்று (நவம்.13) கார்கே வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பின்மையை மோடி அரசு கொடுத்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளது. அவர்கள் பொருளாதார வலிமையை எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு கிடைத்துள்ளதோ விலைவாசி உயர்வு. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் சேமிப்புகள் குறைந்துள்ளன.

இளைஞர்கள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக ஏங்கினர். ஆனால் மோடி அரசாங்கம் அவர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கான பொருளாதார அநீதியை இழைத்துள்ளது. வெறும் 5 சதவீத பணக்கார இந்தியர்கள் நாட்டின் 60 சதவீத வளத்தினை கைவசம் வைத்துள்ளனர். பல்வேறு வேற்றுமைகள் நிறைந்த நம் நாட்டில் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் இளைஞர்கள் விரும்பினர். ஆனால் பாஜக அரசு அவர்களுக்கு வெறுப்பையும், பிரிவினைவாதத்தையும் மட்டுமே அளித்துள்ளது.

மொத்தமாக, மோடி தலைமையிலான பாஜக அரசானது இளைஞர்களின் அனைத்து கனவுகளையும் சிதைத்து வருகிறது. இதன் விளைவாகவே தெலங்கானாவில் மோடி பங்கேற்ற கூட்டத்தில் இளம்பெண் ஒருவர் மின்கம்பத்தில் ஏறி, இளைஞர்களின் பிரச்சினையை பேச முயன்றார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.