பெட்ரோல் குண்டு கவர்மென்ட் மேல வீச வேண்டியது.. கடவுள் மேல வீசிட்டாரு: சீமான்

சென்னையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவை சீமான் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் கூறுகையில், கோவிலில் குண்டு வீசியவர் சொன்ன காரணத்தை சொல்லுங்க.. அவரு கவர்மென்ட் மேல வீச வேண்டியதை கடவுள் மேல வீசிட்டாரு.. அவ்வளவுதான் அவருடைய பகுத்தறிவு. அதுக்கு நம்ம ஒன்னும் பண்ண முடியாது. அவருடைய அறியாமையைத்தான் இது வெளிக்காட்டுது. புரட்சியாளர் அம்பேத்கர் என்ன சொல்றார்னா, இழந்துவிட்ட உரிமையை போராடித்தான் பெறனும் என்கிறார். கோவிலில் 5 வேளை பூஜை நடத்தனும்னு நாம போராடித்தான் நடக்குது. எந்த கோவிலில் அன்னதானம், எந்த கோவிலில் அதுவும் இல்லைங்கிறதை அரசுதான் முடிவு செய்யுது.. அந்த அரசை நோக்கிதான் போராடனும். ஓட்டை இவங்களுக்குப் போட்டுவிட்டு குண்டை கடவுளுக்கு போட்டா எப்படி? என்ன தம்பி.. ஓட்டை இவங்களுக்கு அனுப்பி கோட்டைக்கு அனுப்பிட்டு குண்டு இங்க போட்டா எப்படி? சரி.. அவரு தெரியாம பண்ணிட்டாரு. இவ்வாறு சீமான் கூறினார்.

மேலும் தந்தை பெரியார் சிலையை அகற்றுவோம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது தொடர்பான கேள்வியையும் சீமானிடம் செய்தியாளர்கள் எழுப்பி இருந்தனர். இதற்கு சீமான் கூறுகையில், அவருக்கு தெரியும்.. நடக்கப் போறது இல்லைன்னு தெரியும். நான் கூட அறிவிப்பேன் பார்த்தீர்களா? ரூ1,000 கோடி தருவேன்னு திடீரெனு அறிவிப்பேன். நடக்காது என அவருக்கு தெரியும்.. பெரியார் சிலையை வந்தால் எடுப்போம் என்பதும் அப்படித்தான் என்றார் சீமான்.

இதேபோல அமித்ஷாவின் வாக்குறுதி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சீமான், கடைசியாக அமித்ஷாவும் இலவசம் என பேசியிருக்கிறார். அவங்க என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க..? பிஜேபியின் பிராப்பர்ட்டியா ராமர்? எனக்கு கடவுள் உங்களுக்கு கடவுள் இல்லையா? இறைவனையே இலவசமாக்கிட்டானுங்க இவனுக ஆட்சியில்.. என்ன கொடுமை பாருங்க.. இவ்வளவு ஒரு இழிவான அரசியல் நிலையை எங்கயாவது பார்த்திருக்கீங்களா? அய்யோ.. அய்யோ என்றார்.