தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மதுவும், கஞ்சாவும் அச்சுறுத்தல்: டாக்டர் ராமதாஸ்

மதுவும், கஞ்சாவும்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சட்டம்-ஒழுங்குக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி அன்று மட்டும் சென்னையில் கட்டுப்பாடின்றி ஓடிய கார் மோதியதால் இருவர், சத்தியமங்கலத்தில் மரத்தில் கார் மோதி நால்வர் உள்பட குடிபோதையால் நிகழ்ந்த விபத்துகள் மற்றும் கொலைகளில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினரை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டிய தீபாவளி திருநாளில், போதையின் ஆதிக்கம் காரணமாக 20 உயிர்கள் பலியாகியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய 2 நாள்களில் மட்டும் தமிழ்நாட்டில் ரூ.633 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்படி கடந்த 10-ந் தேதி வழங்கப்பட்ட ரூ.1,138 கோடியில் பாதிக்கும் அதிகமாகும்.

மதுவும், கஞ்சாவும்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சட்டம்-ஒழுங்குக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. மது போதையில் நடைபெறும் விபத்துகள் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள்தான் தமிழகத்தின் அமைதிக்கு ஆபத்தாக உள்ளன. எனவே, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதுடன், கஞ்சா நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.