திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் பேச்சை சுட்டிக்காட்டி, “ஒரு முதியவரை இப்படி புலம்ப வைக்கலாமா.. அவரது வயதுக்காவது கொஞ்சம் மரியாதை கொடுங்கய்யா” என்று திமுகவினரை பார்த்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கலந்துரையாடல் கூட்டத்தில் துரைமுருகன் பேசுகையில், “முதலில் திமுகவினருக்கு உள்ளேயே ஒற்றுமை தேவைப்படுகிறது. கட்சியினர் ஒருவருக்கொருவர் காட்டும் மனக்கசப்பு, ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்களாகிய எங்களுக்கு வேதனையை தருகிறது. திமுகவில் இருக்கும் சிலரே, வருமான வரித்துறைக்கு செய்தி சொல்லும் அளவுக்கு வன்நெஞ்சம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். தேர்தல் முடியும் வரை யாரிடமும் பகைமை காட்ட மாட்டேன் என்றும், யாரையும் போட்டுக் கொடுக்க மாட்டேன் எனவும் நிர்வாகிகள் உறுதிமொழி எடுக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.
இந்நிலையில், துரைமுருகனின் இந்த பேச்சை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு நக்கல் அடித்துள்ளார் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “அய்யோ பாவம், உள்ளம் கலங்கி பேசியிருக்கிறார். திமுகவின் உட்கட்சி பூசலை, துரோகிகளின் கூடாரம் திமுக என்பதை, வன்நெஞ்சம் படைத்தவர்கள் திமுகவினர் என்பதை தெளிவாக கூறியிருக்கிறார். இதனை கூறும் போதும், திமுகவினர் நன்றி கெட்டவர்கள் என்று சொல்லும் போதும் துரைமுருகனின் உள்ளக்குமுறலை நம்மால் உணர முடிகிறது. 60, 70 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவரை இப்படி போட்டு கொடுத்து விட்டார்களே என்று நினைக்கும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது. இன்கம்டாக்ஸுக்கே செய்தி சொன்னவர்கள் யாரென்று தெரிந்தும், அவர்களை குறிப்பிட முடியாத அவரின் சோகம் நெஞ்சை பிளக்கிறது. அய்யோ பாவம், ஐயா துரைமுருகன். வயதுக்காவது மரியாதை கொடுங்கய்யா” எனக் கூறியுள்ளார் நாராயணன் திருப்பதி.
ஆனால், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், துரைமுருகன் இதை பேசியது இப்போது கிடையாது என்பதுதான். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசும் போது, இப்படி பேசியிருந்தார் துரைமுருகன். 2019 மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் துரைமுருகனின் மகன் சுதீர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த சூழலில், வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருப்பதாக கூறி துரைமுருகனுக்கு நெருக்கமான நிர்வாகி வீட்டில் இருந்து ரூ.10 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அதன் பின்னர், துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தால், அந்தக் கூட்டத்தில் துரைமுருகன் அப்படி பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது திமுக அமைச்சர்கள் பலர் மீது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதால், துரைமுருகனின் பழைய பேச்சை, ஏதோ இப்போது அவர் பேசியது போல பாஜகவினர் சமூக வலைதளங்களில் பகிர்நது வருகின்றனர். அந்த வகையில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் துரைமுருகனின் இந்த பழைய பேச்சை பதிவிட்டு, அதற்கு கிண்டலாகவும் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.