உலககோப்பை அரையிறுதி போட்டியில் இன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 50வது சதத்தை அடித்து சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். இதையடுத்து விராட் கோலியை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் ஸ்டாலின் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவில் 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதையடுத்து முதல் அரையிறுதி போட்டி மும்பையில் இன்று நடந்து வருகிறது. இதில் இந்தியாவை, நியூசிலாந்து அணி எதிர்கொண்டுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் ஷர்மா – சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வழக்கம்போல் தனது அதிரடி ஆட்டத்தை ரோகித் ஷர்மா வெளிப்படுத்த சுப்மன் கில் பொறுமையாக ஆடினார். ரோகித் ஷர்மா சிக்ஸ், பவுண்டரிகள் தொடர்ந்து விளாசி 47 ரன்களில் அவுட் ஆனார். அதன்பிறகு விராட் கோலி இறங்கி சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இவர்களும் தங்களின் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தசைப்பிடிப்பு காரணமாக சுப்மன் கில் 79 ரன்களில் ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதையடுத்து விராட் கோலியுடன் ஸ்ரேயஸ் அய்யர் இணைந்தார். இருவரும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். விராட் கோலி சிக்ஸ் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 50வது சதத்தை அவர் பதிவு செய்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி சாதித்தார். விராட் கோலி 117 ரன்களில் அவுட்டான நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக தனது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 397 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கி இமாலய இலக்கை நோக்கி ஆடி வருகிறது.
இந்நிலையில் தான் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 50வது சதமடித்த நிலையில் அவருக்கு சச்சின் தெண்டுல்கர் உள்பட பல வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் விராட் கோலியை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‛‛இன்று விராட் கோலி ஒருநாள் போட்டியில் தனது 50வது சதத்தை அடித்துள்ளார். அதோடு சிறந்த விளையாட்டு திறனையும், விடா முயற்சியையும் எடுத்துக்காட்டும் வகையில் செயல்படுகிறார். இந்த மைல்கல் அவரது அர்ப்பணிப்பு மற்றும் அதிகப்படியான திறமைக்கு சான்றாகும். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எதிர்கால சந்ததியினருக்கு அவர் ஒரு அளவுகோலை நிர்ணயித்து கொண்டே இருக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.
இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‛‛50வது ஒருநாள் சதத்துக்கு விராட் கோலிக்கு பாராட்டுகள். ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50வது சதத்தை அடித்த வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை விராட்டி கோலி எட்டியுள்ளார். இது சிறந்த விளையாட்டு வீரரின் மனப்பான்மை, அர்ப்பணிப்பு மற்றும் ஸ்டேபிலிட்டிக்கான சாட்சி. உங்கள் விளையாட்டை மேலும் புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும். நாடு உங்களை நினைத்து பெருமை கொள்கிறது” என்றார்.
இதுபற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், ‛‛ஒருநாள் போட்டியில் 50 சதங்கள். இது நம்பமுடியாத சாதனை! விராட் கோலியே நீங்கள் ஒரு கிரிக்கெட்டின் அதிசயம். உலககோப்பை அரையிறுதி போட்டியில் உங்களின் அபாரமான சாதனைக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.