அமைதியாக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டமா?: அண்ணாமலை கண்டனம்!

தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் செய்யாறு சிப்காட் அலகு 3 என்ற பெயரில் 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. தொடந்து அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. 54 அலகுகளாக பிரித்து 20 அலகுகள் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 2,700 ஏக்கர் தரிசு நிலம் எனவும் மீதமுள்ள 326 ஏக்கர் பட்டா நிலம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 126 நாட்களாக நடைபெற்றது. போராட்டக்கார்கள் மீது இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 126 நாட்களாக பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடைபெற்றது. கடந்த 4 ஆம் தேதி நடைபயணம் சென்ற போது பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 7 பேர் மீது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அதாவது, அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைதனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க 3,200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 125 நாட்களாக விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாக போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, இதற்கு மேலும் திமுக அரசால் தரம் தாழ்ந்து போக முடியாது என்ற எங்கள் எண்ணத்தை தவறென நிரூபித்துள்ளனர். திமுக அரசின் இந்த கோழைத்தனமான செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் இந்த பாசிச திமுக அரசிடம் இருந்து போராடும் விவசாயிகளை பாதுகாக்க, அவர்கள் குடும்பங்களுக்கு முழு ஆதரவையும் சட்ட உதவியையும் பாஜக வழங்கும் என்ற உறுதியை அளிக்கின்றோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.