செந்தில் பாலாஜியின் இடத்தை இப்போது சிவசங்கர் பிடித்துள்ளார்: அண்ணாமலை

அரியலூர் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் யாத்திரையில் நேற்று ஈடுபட்டார்.

நேற்று பிற்பகல் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் மாரியம்மன் கோயிலின் அருகிலிருந்து யாத்திரையை தொடங்கிய அண்ணாமலை, பேருந்து நிலையம் அருகே முடித்தார். அப்போது, அவர் பேசியதாவது:-

மது இல்லா தமிழகம், கொலை, கொள்ளை இல்லா தமிழகம் உருவாக பாஜக யாத்திரை மேற்கொண்டுள்ளது. ஆனால், திமுக அரசு தீபாவளிக்கு இலக்கு வைத்து மது விற்பனை செய்துள்ளது. இதன் காரணமாக தீபாவளி சமயத்தில் மட்டும் தமிழகத்தில் 20 கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.

ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக 1997-ல் கையகப்படுத்திய 8,373 ஏக்கர் நிலத்தை 36 ஆண்டுகள் கழித்து தற்போது விவசாயிகளிடமே ஒப்படைப்பதாக திமுக அரசு தெரிவித்துள்ளது. இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தால் அரியலூர் மாவட்டம் வளர்ச்சி பெற்றிருக்கும். தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளது. இவ்வாறு அனைத்து விதத்திலும் தமிழக மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, அரியலூர் ஒற்றுமை திடலில் யாத்திரையை தொடங்கிய அண்ணாமலை, அரியலூர் பழையபேருந்து நிலையம் வரை சென்றார். அங்கு அவர் பேசியதாவது:-

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இடத்தை இப்போது அமைச்சர் சிவசங்கர் பிடித்துள்ளார். பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது, பணியிடமாற்றம், நெடுஞ்சாலை உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவது போன்றவற்றில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இங்கு ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-யால் சிதம்பரம் மக்களவை தொகுதி தத்தளித்து வருகிறது. அதை மாற்றி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பாஜக ஆதரவு பெற்ற எம்பியை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.