அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50 விழுக்காடும், ப்ராஜெக்ட் கட்டணம் 100 விழுக்காடும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இளநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.150லிருந்து ரூ.225 ஆகவும், முதுநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.450லிருந்து 650 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர ப்ராஜெக்ட் கட்டணம் இளநிலை மாணவர்களுக்கு 300 ரூபாயிலிருந்து ரூ.600 ஆகவும், முதுநிலை மாணவர்களுக்கு ரூ.600 லிருந்து ரூ.900 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பட்டச் சான்றிதழுக்கான கட்டணம் ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வரலாறு காணாத கட்டண உயர்வு. மாணவர்களின் நலனுக்கு எதிரான இந்தக் கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஓராண்டில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் வீதம் 4 ஆண்டுகளில் மொத்தம் 6 லட்சம் மாணவர்கள் இளநிலை பொறியியல் படிக்கின்றனர். பருவத்திற்கு 9 தாள்கள் வீதம் அவர்கள் எழுத வேண்டும். அதன்படி, தேர்வுக் கட்டணமாக மட்டும் ஆண்டுக்கு ரூ.81 கோடி, ப்ராஜெக்ட் மற்றும் சான்றிதழ் கட்டணமாக ரூ.12 கோடி என இளநிலை மாணவர்களிடமிருந்து மட்டும் ரூ.92 கோடி கூடுதலாக வசூலிக்கப்படும். மொத்தக் கட்டணமாக ரூ.277.50 கோடி வசூலிக்கப்படும். முதுநிலை மாணவர்களையும் சேர்த்தால் இவை முறையே ரூ.125 கோடி, ரூ.400 கோடியைத் தாண்டும். இவ்வளவு அதிக கட்டண உயர்வை பொறியியல் மாணவர்களால் தாங்க முடியாது.
பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையினர் ஏழை மற்றும் நடுத்தர வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலருக்கு அன்றாடம் கல்லூரி வந்து செல்வதற்கான செலவுக்கே பணம் இல்லாத நிலையில், இந்தக் கட்டண உயர்வை அவர்களால் சமாளிக்க முடியாது. கட்டண உயர்வுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ள விளக்கம் மேலும் ஏமாற்றமளிக்கிறது. வரும் பருவத்திற்கு மட்டும் இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்று அறிவித்துள்ள அவர், அதன்பிறகு வரும் பருவங்களுக்கு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதாவது, அடுத்த பருவம் முதல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்படும் என்பது தான் இதன் பொருளாகும். இந்த விளக்கத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
மாணவர்களின் நலன்களையும், அவர்களின் பொருளாதார பின்னணியையும் கருத்தில் கொண்டு தேர்வுக் கட்டண உயர்வை நிரந்தரமாக ரத்து செய்யும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். அதேபோல், பிற பல்கலைக்கழகங்களிலும் தேர்வுக்கட்டணத்தை உயர்த்தும் திட்டமிருந்தால், அதையும் கைவிட வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.