தி.மு.க. ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் சிந்தித்து, உணவூட்டும் நிலத்தாயை அழிக்கும் வேலையைக் கைவிட்டு, மூன்றாம் கட்ட செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பெ. மணியரசன் கூறியுள்ளார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கூறியுள்ளதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் ஏற்கெனவே செயல்படும் சிப்காட் தொழிற்சாலைகளின் பெருநிலப்பரப்பை மேலும் விரிவுபடுத்த மூன்றாம் கட்டமாக 3,174 ஏக்கர் நெல், கரும்பு, வாழை விளையும் நன்செய் நிலங்களை உழவர்களிடமிருந்து பறிக்கும் பெரும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது. தங்களின் தாய் போன்ற விளை நிலங்களைத் தொழிற்சாலைகள் கவ்விக் கொள்வதை உழவர்கள் எதிர்க்கிறார்கள்.
இந்நிலங்கள் 11 ஊராட்சிக் கிராமங்களில் அடுத்தடுத்து இருக்கின்றன. “மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம்” என்ற உழவர்கள் கூட்டமைப்பு கடந்த 125 நாட்களாகத் தொடர்ந்து, மக்கள் திரள் காத்திருப்பு அறப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த உழவர்களில் முன்னோடிகளாக உள்ள 22 பேரை 4.11.2023 அன்று கைது செய்து, பிணை மறுத்து, வெவ்வேறு சிறைகளில் அடைத்து வைத்துள்ளது தி.மு.க. ஆட்சி!
இந்த 22 பேரில் ஏழு பேரைக் குறிவைத்து, அவர்கள் மீது 16.11.2023 அன்று கொடிய குண்டர் சட்டத்தைப் பாய்ச்சி உள்ளது தி.மு.க. ஆட்சி! விசாரணை இல்லாமல், பிணை இல்லாமல், முதல் கட்டமாக ஓராண்டு வரை சிறையில் அடைத்து வைக்கலாம். அரசு விரும்பினால் அதன் பிறகு, மறு ஆணை போட்டு, சிறை அடைப்பை நீட்டித்துக் கொள்ளலாம்! இதுதான் சமூக விரோதிகளுக்கான குண்டர் சட்டம்! அப்படி என்ன சமூக விரோத, நாட்டு விரோத, மக்கள் விரோதக் குற்றங்களை இந்த ஏழு உழவர்களும் செய்து விட்டார்கள்? உழவு நிலத்தைப் பறித்து, கார்ப்பொரேட் முதலாளிகளுக்குக் கொடுக்காதே என்று குரலெழுப்பி அறப் போராட்டம் நடத்தியது குற்றமா? தி.மு.க. ஆட்சி கார்ப்பொரேட் முதலாளிகளுக்குக் கங்காணி வேலை பார்த்து, உழவு நிலங்களை அழிக்கலாமா?
வரம்பற்ற தொழிற்சாலைப் பெருக்கம் வேளாண்மை மற்றும் தொழிற்சாலை – சமன்பாட்டைச் சீர்குலைத்துவிடும். சுற்றுச்சூழலை மாசாக்கி, மக்கள் வாழ முடியாத நிலையை உண்டாக்கும் என்ற உண்மையை வட அமெரிக்காவின் டெட்ராய்டு நகரத்திலிருந்தும், மேற்கத்தியத் தொழில் வீக்க நாடுகளிலிருந்தும் இந்திய ஆட்சியாளர்களும், தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் படிப்பினையாகக் கொள்ள வேண்டும். டாட்டாவின் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்காக மேற்கு வங்கம் சிங்கூரில் உழவர் நிலங்களைப் பறித்ததனால்தான், அம்மாநிலத்தில் மீண்டும் எழ முடியாத தோல்வியை அப்போது ஆட்சியிலிருந்த சி.பி.எம். கட்சி அடைந்தது. அதைத் தி.மு.க. ஆட்சியாளர்கள் படிப்பினையாகக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டு உழவர்களும், மக்களும் எங்கோ செய்யாற்றுப் பகுதியில் வேளாண் நிலப்பறிப்பு நடக்கிறது என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. நாளைக்கு நமக்கும் வரும் என்ற எச்சரிக்கையுடன் செய்யாறு உழவர்கள் மீது தி.மு.க. ஆட்சி நடத்தும் மனித உரிமைப் பறிப்புகளைக் கண்டித்துக் குரலெழுப்ப வேண்டும்.
தி.மு.க. ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் சிந்தித்து, உணவூட்டும் நிலத்தாயை அழிக்கும் வேலையைக் கைவிட்டு, மூன்றாம் கட்ட செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும். குண்டர் சட்டத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள உழவர் தலைவர்கள் மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஊத்தங்கரை – அத்திப்பாடி அருள் ஆறுமுகம், செய்யாறு வட்டம் தேத்துறை பச்சையப்பன், எருமைவெட்டி தேவன், மணிப்புரம் சோழன், மேல்மா திருமால், நர்மாபள்ளம் மாசிலாமணி, குரும்பூர் பாக்கியராசு ஆகிய ஏழு பேரையும், இதரச் சட்டங்களில் சிறைகளில் உள்ள எஞ்சிய 15 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.