இஸ்ரேல் – ஹமாஸ் போரை உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், போரில் பொதுமக்கள் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது குளோபல் சவுத் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து புதிய சவால்கள் உருவாகி வருவதை நாம் அனைவரும் பார்க்கிறோம். அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் நாங்கள் நிதானத்தையும் கடைப்பிடித்தோம். போர் குறித்த பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். போர் குறித்து பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பேசினேன். இந்தியா சார்பில் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் அனுப்பியுள்ளோம். உலகளாவிய நலனுக்காக குளோபல் சவுத் நாடுகள் ஒன்றுபட வேண்டிய நேரம் இது.
செயற்கை நுண்ணறிவு காலத்தில், தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம். இதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அடுத்த மாதம், குளோபல் பார்ட்னர்ஷிப் ஆஃப் ஆர்டிஃபிஷியல் (Global Partnership on Artificial Intelligence (GPAI))உச்சி மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரேல் நாட்டின் மீது அக்டோபர் 7-ம் தேதியன்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு திடீர் தாக்குதலைத் நடத்தியது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலும் தொடர்ந்து தன்னுடைய எதிர்த் தாக்குதலை நடந்தி வருகிறது. இந்த மோதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர்.