இலங்கை ராணுவத்தால் 22 தமிழக மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த இரண்டு விசை படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 22 மீனவர்களை, எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதேபோல அவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்திய 2 விசை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது போன்று தொடர்ச்சியான கைதுகள் நீடித்து வருவதால் இதற்கு நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகியது. தமிழகக் கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவு சென்றால் தான் மீன்கள் கிடைக்கும். அவ்வாறு மீன்கள் கிடைக்கும் பகுதிகள் அனைத்தும் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகள் ஆகும். அங்கு சென்று மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது. அதை மதிக்காமல் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்யும் கொடுமைக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். மீனவர் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை தீர்ப்பதற்காக இந்தியா – இலங்கை கூட்டுப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இருதரப்பு மீனவர் சிக்கலைத் தீர்க்க அந்தக்குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்தாலும் கூட, அவற்றை இலங்கை அரசு மதிக்காதது தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும். மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்குடன் இந்தியா – இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி சாதகமான முடிவை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.