மத்திய பல்கலை. துணைவேந்தராக பிரதமர் தான் இருக்கிறார்: பொன்முடி விளக்கம்!

மேற்கு வங்கத்தில் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதமர் தான் இருக்கிறார் என்று அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் பேசினார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் நீண்ட நாள்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த மசோதாக்களில் சிலவற்றுக்கு விளக்கங்களைக் கேட்டு, ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த 10 மசோதாக்களில் பெரும்பாலும் பல்கலைக்கழகங்கள் தொடர்பானவை என்று கூறப்படுகிறது. இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உடனடியாக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படியே, இன்றைய தினம் 18ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் கூடியது. இந்த சிறப்புக் கூட்டத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதக்களை மீண்டும் தாக்கல் செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏக்கள் பேசினர்.

அந்த வகையில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசும்போது, “என்னுடைய நினைவு சரியாக இருக்கும் என்றால், வேந்தர்களை நியமனம் செய்வதற்கு ஆளுநருக்கு தான் அதிகாரம் உண்டு என்று 1998ம் ஆண்டு இதே சபையில் கலைஞர் முதல்வராக இருக்கும்போது தீர்மான கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போது வேந்தராக முதல்வரே இருக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது என கருதுகிறேன்.

அப்போது அவர் பேசியதற்கு பதில் அளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார். அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

உறுப்பினர் அவர்கள் பேசியபோது, வேந்தர்கள் எதோ தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எல்லாம் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டார். அரசியலில் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டார். அதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன். மேற்கு வங்காளத்தில் இருக்க கூடிய மத்திய பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரே இந்திய நாட்டினுடைய பிரதமராக இருப்பவர் தான். இந்திய பிரதமர் மோடி தான் அதனுடைய துணைவேந்தராக இருக்கிறார். இது மட்டும் எப்படி நடந்தது. ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் அவருடைய மாநிலத்தில் கூட இல்லை. மேற்கு வங்காளத்தில் உள்ள மத்திய பல்ககலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கிறார் என்று சொன்னால், அதற்கு வழிவகுக்குற சட்டம் இதற்கு வழி வகுக்காதா?, குஜராத்திலேயேயும் பல்வேறு பல்கலைக்கழகங்களிலே அந்த முதல்வர் தான் துணைவேந்தராக இருந்துகொண்டு இருக்கிறார். தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் எல்லாம் பல்கலைக்கழக துணை வேந்தர்களை அந்தந்த மாநில முதல்வர், அந்த அரசு யாரை பரிந்துரை செய்கிறாரோ யாரை பரிந்துரை செய்கிறதோ அவர்களை தான் நியமிக்க வேண்டும் என்று சட்டங்களும் அங்கே இருக்கின்றன. ஆகவே அந்த அடிப்படையில் தான் நாங்கள் இதை வலியுறுத்துகிறோம். அரசியல் அமைப்பு சட்டத்தில் மிக தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அரசியல் அமைப்பு சட்டமே இதற்கான வழிவகைகளை வகுத்திருக்கிறது. தமிழக முதல்வர் தான் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து பல்கலைக்கழங்களின் வேந்தராக இருந்தால் தான் அனைத்தும் இங்கு உண்மையாக எல்லாம் நடைபெறும் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.