சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் ஆளுநர் தர மறுத்தது சர்வாதிகாரம்: துரைமுருகன்

சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் ஆளுநர் தர மறுத்தது சர்வாதிகாரம் என்று சட்டசபையில் அவை முன்னவர் துரைமுருகன் கூறினார். துணைவேந்தர் நியமனத்தில் சிண்டிகேட் கூறினாலும் ஆளுநர் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் சட்டசபையில் துரைமுருகன் பேசினார்.

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் கடந்த 13ஆம் தேதி அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு சட்டசபையின் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார். கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் பலரும் தனித்தீர்மானத்தை ஆதரித்து பேசினர். சட்டசபையில் பேசிய நயினார் நாகேந்திரன், தனித்தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்வதாக கூறினார். முதல்வரை வேந்தராக நியமனம் செய்வது குறித்த மசோதா பற்றிய பேச்சு வந்த போது இது போன்ற மசோதாவை நாங்கள் 29 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றினோம். அப்போது திமுக எதிர்த்தது என்றார். திமுக இரட்டை நிலைப்பாடு எடுப்பதாகவும் கூறினார்.

அதற்கு துரைமுருகன் பதில் அளித்து பேசினார். சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் அளிக்க ஆளுநர் மறுத்தது கடைந்தெடுத்த சர்வாதிகாரம் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய துரைமுருகன், அண்ணன் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க சென்னை பல்கலைக்கழகம் முடிவு எடுத்திருந்தது. நான் அப்போது சிண்டிகேட் உறுப்பினராக இருந்தேன். சிண்டிகேட் உறுப்பினர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தாலும், டாக்டர் பட்டம் கொடுக்க முடியாது. நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்று நினைத்த பல்கலைக்கழக நிர்வாகம், சிண்டிகேட் கூட்டம் கூட்டவில்லை. பட்டம் அளிக்கும் நாளன்று அவசர அவசரமாக சிண்டிகேட் கூட்டம் கூட்டினார்கள். இதுகுறித்து நான் கருணாநிதியிடம் சொன்னேன். அதற்கு கருணாநிதி, ‘எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்க்கக் கூடாது. அவர், உனக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளார் என்று கூறினார். துணை நடிகர் அளவிலிருந்து எம்.ஜி.ஆர் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளார். அவர் இந்த டாக்டர் பட்டத்துக்கு தகுதியானவர். நீயே, டாக்டர் பட்டம் வழங்குவதற்கு முன்மொழிய வேண்டும் என்றார் என்று கூறினார் கருணாநிதி என்னிடம் கூறியதைக் கேட்டு எம்.ஜி.ஆர் மகிழ்ச்சியடைந்தார் என்றும் துரைமுருகன் சட்டசபையில் பிளாஷ் பேக் சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து மீன்வளப்பல்கலைக்கழகத்தில் ஜெயலலிதாவின் பெயர் மாற்றப்படுவதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது. ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்த 10 சட்ட மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்ற, முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.