திருச்செந்தூர் கோவிலில் புதிதாக எந்த கட்டண உயர்வும் அமல்படுத்தவில்லை: சேகர்பாபு

திருச்செந்தூர் கோவிலில் புதிதாக எந்த கட்டண உயர்வும் அமல்படுத்தவில்லை என்றும், ஒருசிலர் விஷம பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில். இந்தக் கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆலயத்தில் இலவச தரிசனம், ரூ.20, ரூ.100 என தரிசன கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் கந்த சஷ்டி விரத நாட்களில் அபிஷேகம் மற்றும் தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டதாக புகார் எழுந்தது. ரூ. 100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ. 2,000 ஆகவும், ரூ.100 ஆக இருந்த சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 1,000 ஆகவும், ரூ.500 ஆக இருந்த அபிஷேக கட்டணம் ரூ. 3,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்து முன்னணி, பாஜக உள்ளிட்டவை, கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கடவுளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் வசூலிப்பது பெரும் அநீதி, இந்த கட்டண கொள்ளையை இந்து சமய அறநிலையத்துறை நிறுத்தவேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதிதாக எந்த விதமான கட்டண உயர்வும் அமல்படுத்தவில்லை. கடந்த ஆதிமுக ஆட்சியில் தான் கட்டணம் உயர்வு கொண்டுவரப்பட்டது. ரூ.500 ஆக இருந்த அபிஷேக கட்டணத்தை ரூ.3,000 ஆக உயர்த்தினார்கள். இப்போது எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஒருசிலர் திட்டமிட்டு விஷமத்தனமான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி என பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை என்ற ஒரு துறையே இருக்காது என மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்கள் தான் இதற்கு பின்னணியில் இருக்கிறார்கள் என்றும், தமிழக பக்தர்கள் ஏமாற தயாராக இல்லை என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.