“கல்வித்துறை அமைச்சராக ஒரு கண்ணியமான பதவி வகிக்கும் அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலினோட ரசிகர் மன்றத் தலைவராக இருந்தால் தமிழ்நாட்டில் கல்வியோட நிலை எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராக அட்டாக் செய்து வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த வார டார்கெட்டாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை தேர்வு செய்திருக்கிறார் போல. அன்பில் மகேஷ் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அண்ணாமலை அடுக்கி வருகிறார். அன்பில் மகேஷின் சொந்த ஊரான திருச்சியில் நேற்று நடைபெற்ற தனது ‘என் மண்; என் மக்கள்’ பாதயாத்திரையில் அவரை கடுமையாக விமர்சித்தார் அண்ணாமலை. அவர் பேசியாவது:-
அண்ணன் அன்பில் மகேஷ், நம்ம பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருக்குறாரு. உங்க எல்லோருக்கும் தெரியும். அவரோட முழுநேர வேலை என்னனு உங்க யாருக்காவது தெரியுமா? நான் சொல்றேன் கேளுங்க. தயவுசெய்து சிரிக்காம கேளுங்க. நான் சொல்றது அத்தனையும் சத்தியம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றத் தலைவராக இருப்பதுதான் அன்பில் மகேஷின் முழுநேர வேலை. நான் காமெடிக்கு சொல்றேனு நினைக்காதீங்க. உண்மைய சொல்றேன். என்ட்ட ஆதாரம் இருக்கு. உதயநிதியோட ரசிகர் மன்றம் இருப்பதே அன்பில் மகேஷின் பெயரில் தான். இது எத்தனை பேருக்கு தெரியும்?
இந்த சாபக்கேடு உலகத்துல எந்த நாட்டுலேயும் நடக்காது. ஒரு கல்வி அமைச்சராக இருப்பவர், திமுகவின் பட்டத்து இளவரசரான உதயநிதி ஸ்டாலினுக்கு ரசிகர் மன்றத் தலைவராகவும் இருக்காரு. எப்படி கல்லூரி வெளங்கும்? எப்படி பள்ளிக்கூடங்கள் வெளங்கும்? இப்போ அன்பில் மகேஷ் என்ன செஞ்சுட்டு இருக்காரு தெரியுமா? புல்லட் பாண்டியா புது அவதாரம் எடுத்துருக்குற நம்ம உதயநிதி ஸ்டாலினுக்கு (புல்லட் பைக்கில் இளைஞரணி மாநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்காக), புல்லட்டை எப்படி ஸ்டார்ட் பண்ணனும்; எப்படி ஸ்டாண்ட் போடணும்னு சொல்லிக் கொடுத்துட்டு இருக்காரு.
அன்பில் மகேஷுக்கு நான் ஒரு வார்த்தையை சொல்லி ஆகணும். தமிழ்நாட்டுல 1 லட்சத்துக்கு 46 ஆயிரம் பிள்ளைகள், பள்ளிப்படிப்பை பாதியில விட்ருக்காங்க. இது அவருக்கு தெரியுமானு தெரியல. திருச்சியில் மட்டும் 3,460 குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியில கைவிட்ருக்காங்க. ஒரு கல்வி அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் என்ன பண்ணனும்? அந்த பிள்ளைங்க வீட்டுக்கு போய், எதுக்கு பசங்க பள்ளிக்கூடத்துக்கு வரலனு கேக்கணுமா வேண்டாமா? காமராஜர் ஐயா இருந்திருந்தால் அதை தானே செய்திருப்பார். ஆனால், நம்ம அன்பில் மகேஷ் என்ன பண்ணிட்டு இருக்காரு? பைக்கை எப்படி ஸ்டார்ட் பண்ணனும்னு சொல்லிக் கொடுத்துட்டு இருக்காரு. இந்த மாதிரி ஆள் எல்லாம் அமைச்சராக இருந்தால வெளங்குமா?. இவ்வாறு அண்ணாமலை கேள்வியெழுப்பினார்.