மாநில உரிமைகளை தாரை வார்த்துக் கொடுத்தது திமுக அரசு தான் என அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார் கூறினார்.
தருமபுரி மாவட்ட அதிமுக ஜெ பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்க அதிமுக கொள்கைப் பரப்பு செயலாளர் ஜெயக்குமார் இன்று(நவ.19) தருமபுரி வந்தார். திருமண நிகழ்வில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
பல்கலைக் கழக திருத்தச் சட்டங்கள் தொடர்பான 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு மீண்டும் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் சிறப்புக் கூட்டம் கூட்டி மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன?
1994-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது அன்றைய முதல்வர் ஜெயலலிதா, பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் பதவியை மாநில முதல்வரே வகிக்கலாம் என்ற சட்டத்தை கொண்டுவந்தார். ஆனால், 1996-ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன், ‘இந்த சட்டம் பல்கலைக் கழகங்களின் தனித்தன்மையை பாதிக்கும்’ என்று கூறி அந்த சட்டத்தை எதிர்த்தார். இன்று திமுகவினர் அதற்கு எதிர்மாறான நிலைப்பாட்டில் உள்ளனர். மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி என்ற கொள்கை கொண்ட திமுக, முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது. ஆளுநர் தலையாட்டி பொம்மையாக இருக்க வேண்டும் என திமுக நினைக்கிறது. திமுகவின் விருப்பத்துக்கு உட்பட்டு செயல்படும் நபராக இல்லையெனில், ஆளுநர் நாட்டுக்கு தேவையில்லை என்கிறது திமுக.
17 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த கட்சியுடன் அங்கம் வகித்த திமுக, ஆளுநருக்கான அதிகாரங்கள் தொடர்பான வரையறைகளை அமல்படுத்தி இருந்தால் எதிர்காலத்தில் இந்த பிரச்சினைகள் எதுவும் வந்திருக்காது. ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே மோதல் போக்கும் ஏற்பட்டிருக்காது. எதிர்கட்சியாக உள்ளபோது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என தேவைக்கு ஏற்ப பச்சோந்தி தனமான செயல்பாடு கொண்டதாக திமுக உள்ளது.
2018-ம் ஆண்டு, மீன்வள பல்கலைக் கழகத்துக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரை சூட்ட அன்றைய அதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. அதை இன்றைய திமுக அரசு கைவிட்டுள்ளது. மாநில உரிமைகளை தாரை வார்த்துக் கொடுத்தது திமுக அரசு தான். அதிமுகவைப் பொறுத்தவரை எங்களுக்கென ஒரு தனித்தன்மை உள்ளது. இரட்டை நிலைப்பாட்டுடன் என்றுமே அதிமுக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.