திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடக்கும் கட்டணக் கொள்ளையை அமைச்சர் சேகர்பாபு மறைக்கிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இந்து சமய அறநிலையத் துறை பக்தர்களிடம் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தமிழக அரசின் இந்த கட்டணக் கொள்ளை பக்தர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திஉள்ளது.
பக்தர்களிடம் நேரடியாக பணத்தை வாங்கிக்கொண்டு, அதிகாரிகள் சிலர் முறைகேடாக அனுமதிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. ஆனால் காவல் துறை, அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருச்செந்தூரில் சஷ்டி திருவிழாவுக்காக உயர்த்தப்பட்டுள்ள கட்டண தரிசனத்தை அனைத்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் அமல்படுத்தி வசூல் வேட்டை நடத்தலாம் என்ற எண்ணத்தில் அறநிலையத் துறை இருப்பதாக தெரிகிறது.
திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டண விவகாரத்தில் ஏற்கெனவே நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட்டுள்ளது. இதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கட்டணக் கொள்ளையில் அறநிலையத் துறை ஈடுபடுவது சட்டவிரோத செயலாகும். ஆனால் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கட்டணக் கொள்ளையை மறைப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார். திருச்செந்தூரில் எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை, ஏற்கெனவே உள்ளதுதான் என அவர் அளிக்கும் விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள்.
திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் கட்டணக் கொள்ளையை மறைப்பதை நிறுத்தி விட்டு, அறநிலையத் துறை அமைச்சர் என்ற முறையில் அவர், கட்டணக் கொள்ளையை நிறுத்த முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை உயர்த்தி உள்ள கட்டணங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். எந்த வகையிலும் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.