ஆஸ்திரேலியா பிரதமர் வீட்டில் அமலாக்கத்துறை: பாஜகவை சீண்டிய மஹுவா மொய்த்ரா!

இந்திய அணி, உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், பாஜக அரசை சீண்டியுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா.

உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இந்தப் போட்டியை பார்ப்பதற்கு அகமதாபாத் மைதானத்திற்கு வருகை தந்தார். அவர் மட்டுமின்றி ஆஸ்திரேலியா துணை பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்டு மார்லஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோரும் இந்தப் போட்டியைக் காண நேரில் வருகை தந்தனர். லட்சக்கணக்கான இந்திய ரசிகர்களுடன், பிரதமர் மோடி இந்தப் போட்டியைப் பார்த்தார். இந்நிலையில், இந்திய அணி உலகக் கோப்பையை தவற விட்டுள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடியையும், பாஜக அரசையும் சீண்டும் வகையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் மஹுவா மொய்த்ரா.”பிரேக்கிங் நியூஸ்: ஆஸ்திரேலிய பிரதமரின் இல்லத்தில் அமலாக்கத்துறை ரெய்டு” என்று குறிப்பிட்டுள்ள செய்தியை பகிர்ந்துள்ள மஹுவா மொய்த்ரா, “அகமதாபாத் ஸ்டேடியம் பெயர் மாற்றப்பட்டது. ஜவஜர்லால் நேரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக அரசு, தங்கள் தோல்விகளுக்கு நேருவை குற்றம்சாட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது வழக்கம். அதோடு, பாஜக அரசு தங்கள் அரசியல் எதிரிகளை குறி வைக்க அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் அடிக்கடி குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், பாஜகவை கிண்டல் செய்யும் வகையில் மஹுவா மொய்த்ரா இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி மஹுவா மொய்த்ரா மக்களவையில் கேள்வி கேட்க பணம் வாங்கினாரா? இல்லையா? என்ற விஷயம் தேசிய அளவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பாஜக எம்.பி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு அனுப்பிய புகார் கடிதம், நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை, எம்.பி பதவியில் நீக்கம் செய்ய சபாநாயகருக்கு பரிந்துரை என அடுத்தடுத்து அதிரடியான சம்பவங்கள் அரங்கேறின. விரைவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. அதில் மஹுவா மொய்த்ரா மீதான பதவி நீக்க பரிந்துரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். அதன்பிறகு உரிய வாக்கெடுப்பிற்கு பின்னர் சபாநாயகர் இறுதி முடிவை எடுப்பார். இன்னும் 5 மாதங்களில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், மஹுவா மொய்த்ரா எம்.பி பதவியில் நீடிப்பாரா இல்லையா கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.