அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி கோரி தமிழக அரசு ஆளுநருக்கு கோரிக்கையை அனுப்பியது. இந்த கோரிக்கைக்கு தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதியளித்துள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர்களான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இது தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை கோரியிருந்தது. இந்த கோரிக்கையை மாநில அமைச்சரவை ஆளுநருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பி வைத்திருந்தது. இந்த கோரிக்கை மீது எந்த பதிலும் கிடைக்காததால் இந்த வழக்கில் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது இந்த கோரிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். இது தவிர மேலும், இரண்டு நிகழ்வுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட அனுமதியை சிபிஐ கோரியது. இந்தக் கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும், இந்த ஆண்டு ஆண்டு மே மாதமும் அளுநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது. இதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய கோரிக்கை மட்டும் பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல பேராசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரிடம் விசாரணை நடத்தவும் ஆளுநர் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டிய விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததில் 165 கைதிகளின் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 580 கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்ப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.