சட்டவிரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்ததில் சுமார் 7 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் நீர்வளத் துறையின் சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் விற்பனை செய்யப்படும் ஆற்று மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றதை அடுத்து, தமிழகத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரி மையங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்கள் எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் மற்றும் அவர்களது கூட்டாளிகளான ஆடிட்டர் பி.சண்முகராஜ் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட 34 இடங்களில் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சென்னையை பொறுத்தவரை எழிலகத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகம் மற்றும் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அறையிலும் சோதனை நடந்தது. இதில் ரூ.12.82 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், கணக்கில் வராத ரூ.2.33 கோடி பணம் மற்றும் ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆற்று மணல் அள்ளுவதில் அரசு உயர் அதிகாரிகள் முறையான கண்காணிப்பில் ஈடுபடவில்லை என்றும், அவர்களின் ஒத்துழைப்போடுதான் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
ஏற்கனவே 2 முறை சோதனை நடத்தப்பட்ட குவாரிகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் 2 பேர் என 10 பேர் கொண்ட குழுவினர், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டனர். கொள்ளிடம் ஆற்றின் நடுவே எவ்வளவு ஆழத்துக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஐஐடி கான்பூர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் உதவியுடன், ரப்பர் படகில், ஆழம் கண்டறியும் கருவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த ஆய்வின்போது, 3 அடி ஆழத்துக்கு மட்டுமே மண் அள்ளவேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், 15 அடிக்கும் மேல் மணல் எடுத்து இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 25 மணல் குவாரிகள் குறித்த விவரங்களை ஒப்பந்ததாரர்களை வரவழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அதேநேரம், சட்டவிரோதமாக அள்ளப்பட்ட மணல் விற்பனை குறித்த விவரங்களை சேகரித்துத் தருமாறு நீர்வளத்துறை பொறியாளர்களிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையின்போது அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களை கைகாட்டியதாக கூறப்படுகிறது. மணல் அள்ளுவதைப் பொருத்தவரை, மாவட்ட ஆட்சியர்கள்தான் மாவட்டங்களில் அதிக அதிகாரம் கொண்டவர்கள். இதையடுத்து விசாரணைக்காக 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. விரைவில் விசாரணை அதிகாரிகள் முன் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதனையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா முதற்கட்டமாக நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஆற்று மணல் அள்ளப்பட்டதா? என்ற கோணத்தில் கேள்விகளை எழுப்பினர். தமிழகத்தில் செயல்பட்டுவரும் மணல் குவாரிகளுக்கு எந்த அடிப்படையில் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகிறது? அவை எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது? என்ற கேள்விகள் முத்தையாவிடம் முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழகத்தில் எத்தனை குவாரிகளுக்கு மணல் அள்ளுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை இந்த விசாரணையின்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமலாக்கத்துறை விசாரணை நள்ளிரவு தாண்டியும் நீடித்தது. இரண்டாவது நாளாக இன்றைக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முத்தையாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் சிக்கப்போவது யார் என்ற எதிர்பார்பார்ப்பு எழுந்துள்ளது.