இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன்?: சு.வெங்கடேசன்

இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன்? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் உலகப் பாரம்பரிய வார விழாவையொட்டி தொல்லியல் துறையின் புகைப்படக் கண்காட்சியை நேற்று தொடங்கியது. இதனை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். அதாவது, உலகப் பாரம்பரிய வார விழா நவம்பர் 19 முதல் 25ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்டம் மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரி ஆகியவை இணைந்து ‘தென் தமிழக கோயில்கள்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த புகைப்படக் கண்காட்சியை மதுரை தியாகராசர் கல்லூரி வளாகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதில் பேசிய நிர்மலா சீதாராமன், “தமிழகத்தில் உள்ள பாரம்பரியத்தை மக்களுக்கு சொல்லக்கூடிய வாய்ப்பு இல்லையே எனும் மனவேதனை என்னிடத்தில் இருந்தது. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை நம் முன்னோர்கள் பாறைகளில் அருமையாக சிற்பங்களாக வடித்துள்ளனர். அமைச்சர் வருகிறார் என பாரம்பரிய இடங்களில் வெள்ளை அடித்து விடுகிறார்கள். வெள்ளை அடிக்கபட்டதற்கு பின்னால் உள்ள சரித்திரம் யாருக்கும் தெரிவதில்லை. இப்படியாக தொல்லியல் பாறைகள் சிதிலமடைந்திருப்பது மனதுக்கு வேதனையாக உள்ளது. தமிழ் இலக்கியங்களுக்கும் குடைவரை கோவில்களுக்கும் நெடிய தொடர்புகள் உள்ளன. குடைவரை கோவில்களில் உள்ள எழுத்துக்களுக்கும் தமிழ் மொழியின் ஆன்மிகம், இலக்கியம் ஆகியவற்றுக்கும் தொடர்புள்ளன” என்று பேசினார்.

இந்நிலையில் இவரது பேச்சு பதிலளித்துள்ள மதுரை சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன், “ASI எனப்படும் இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன்?” என கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் சோஷியல் மீடியா தளத்தில், “மத்திய அமைச்சர் நிர்மாலா சீதாராமன், மதுரையில் ASI பற்றியும், தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் பெருமையோடு பேசியிருக்கிறார். அவருக்கு எனது நன்றி. தமிழ்நாட்டு வரலாற்றின் புதிய திருப்புமுனை கீழடி. ஆனால் இதே ASI கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன் என்பதை கூற முடியுமா? இதே ASI கீழடி பற்றிய அமர்நாத் இராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கையை இன்று வரை வெளியிடாமல் வைத்திருப்பது ஏன் என்று கூற முடியுமா? ASI இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றை எழுத தீர்மானித்த குழுவில் தமிழ்நாட்டு ஆய்வாளர் ஒருவரை கூட இடம்பெறச்செய்யாதது ஏன் என கூற முடியுமா?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.