மணிப்பூருக்குச் செல்ல பிரதமருக்கு நேரமில்லை: பிரியங்கா காந்தி!

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் செல்ல நேரமில்லாத பிரதமருக்கு அகமதாபாத்தில் கிரிக்கெட் போட்டியை காணச் சென்றதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் பேரவைத் தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாபுராவில் நடைபெற்ற பேரணியில் இன்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

மோடி தன்னை ஃபக்கீர் என்று கூறிக்கொள்வதாகவும், அவரது ஆட்சியில் பாஜக எப்படி பணக்கார கட்சியாக மாறியது என்றும் கேள்வி எழுப்பினார். மணிப்பூர் ஏழு மாதங்களாக இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடிக்கு அங்குச் செல்ல நேரமில்லை, மாறாக இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண அகமதாபாத்திற்குச் சென்றார்.

உலகக் கோப்பையில் இந்தியர்களின் கடின உழைப்பால் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பெருமையும், மரியாதையும் இருந்தால் பிரதமர் ஒரு இடத்திற்குச் செல்வார், ஆனால் நெருக்கடி சூழ்நிலையிலிருந்து விலகி இருப்பார். பிரதமர் மோடியும், மத்திய அரசும் பெரிய தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்ததாகவும், ஆனால் ஏழைகளைப் புறக்கணித்ததாகவும் குற்றம் சாட்டிய அவர் அரசியலில் மதத்தைக் கலப்பது பாவம் என்றும் கூறினார்.