கோயில் சொத்துகள் கொள்ளை என திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர்: அமைச்சர் சேகர்பாபு

கோயில் சொத்துகள் கொள்ளை என திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் இந்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற உலக பாரம்பரிய வார விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழகத்தில் உள்ள பாரம்பரியத்தை மக்களுக்கு சொல்லக்கூடிய வாய்ப்பு இல்லையே எனும் மனவேதனை என்னிடத்தில் இருந்தது. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை நம் முன்னோர்கள் பாறைகளில் அருமையாக சிற்பங்களாக வடித்துள்ளனர் என்று கூறினார். தமிழகத்தில் நமது பாரம்பரியத்தை எடுத்து சொல்வதற்கான வாய்ப்பு இல்லை. சில சமயம் அதில் அரசியல் நுழைந்து, சர்ச்சைகள் உருவாகிறது. கோயில் சொத்துக்களை திருடி வெளிநாடுகளுக்கு விற்கின்றனர். கோயில் சொத்துக்களை விற்கும் பணம் யாருக்கு செல்கிறது என தெரியவில்லை. நமது கோயில் சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டது. வெளிநாடு அருங்காட்சியகத்தில் இருக்கும் கோயில் சொத்துக்களை நாம் ஆச்சரியமாக பார்க்கிறோம் என்று கூறினார்.

இந்நிலையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

இந்து சமய அறநிலைத்துறை என்பது ஆன்மீகத்திற்கும், இறையன்பர்களை சிறப்பிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படிப்பட்ட குற்றசாட்டை கூறுவது கண்டிக்கத்தக்கது. ஒரு விஷயத்தை ஆராயாமல் வாய் புளித்ததோ, மாங்கா புளித்ததோ என்று பேசக்கூடாது.. இறை சொத்தை களவாடக் கூடிய ஆட்சி இது இல்லை. பாதுகாக்க கூடிய ஆட்சியாகத்தான் உள்ளது. இந்த ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்று பிம்பத்தை உருவாக்க நினைத்தார்கள். ஆனால் அது நிறைவேறவில்லை. இந்து சமயத்தை தனது இரு கரங்களால் முதலமைச்சர் அரவணைத்து செல்கிறார். இந்துக்களின் ஓட்டு தங்களுக்கு வராது என்ற காரணத்தால் இது போல் குற்றசாட்டை வைக்கின்றனர். கோயில் சொத்துகள் கொள்ளை என திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். பரம்பரை அறங்காவலர்கள் கோயில் சொத்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவே அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது.

இந்த அவதூறுகளை சற்றும் சலிக்காமல் சொல்லி வருகின்றனர். இவை எல்லாம் கண்டுகொள்ளாமல் அனைத்து பணிகளையும் செய்வோம். 200 உலோக திருமேனி சிலைகள் உள்ளிட்ட 400 பொருட்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. காணாமல் போன சிலைகளையும் மீட்கப்பட்டு வருகிறோம். மறுபுறம் காணமல் போகாமல் இருக்க நடவடிக்கை எடுத்து கொண்டு வருகிறோம். இந்துக்கள் அல்லாமல், அறங்காவலர்களை பணிக்கு யாரையும் நியமனம் செய்யப்படவில்லை. இந்த துறையில் பணிபுரியும் அனைவரும் இந்துக்கள்தான். அப்படி ஏதேனும் இருந்தால் கவனத்திற்கு கொண்டு வந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சேகர்பாபு கூறினார்.