மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கே முழு அதிகாரமும் உள்ளது என பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி அரசுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இடைவிடாத மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். பஞ்சாப் மாநில சட்டசபையை கூட்ட விடாமல் முடக்குவது, பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை முடக்கி வைப்பது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் இந்த செயல்பாடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பஞ்சாப் ஆளுநர் நெருப்புடன் விளையாடுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஒரு ஆளுநர் எப்படி முடக்கி வைக்க முடியும்? ஆளுநருக்கு இதுபோல அதிகாரங்களை கொடுத்தது யார்? சட்டசபை கூட்டத் தொடர் முடிந்துவிட்டது என்பதாலேயே மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமாட்டேன் என்பது எப்படி சரியாகும்? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் கடுமையாக சாடியது.
இந்நிலையில், பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை பதிவேற்றம் செய்தது. இந்த தீர்ப்பில், ஆளுநர் vs மாநில அரசு இடையேயான பிரச்சினைக்கு உச்சநீதிமன்றம் தெளிவான பதில் அளித்துள்ளது. அதில், ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதலைத் தடுத்து நிறுத்தினால், அதை மறுபரிசீலனை செய்ய சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. மேலும், ஆளுநர் ஒரு தேர்ந்தெடுக்கப்படாத மாநிலத் தலைவர் என்றும், அவரது அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசின் சட்டமியற்றும் வழக்கமான போக்கை முறியடிக்க முடியாது என்றும் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனநாயகத்தின் பாராளுமன்ற வடிவில், உண்மையான அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமே உள்ளது. அடையாள பதவியான ஆளுநர், மசோதாக்கள் மீதான நடவடிக்கையை தடுக்க முடியாது. ஆளுநருக்கு தனியாக எந்த அதிகாரமும் இல்லை. அரசும் அமைச்சர்களும் சொல்வதன் படி தான் ஆளுநர் செயல்பட முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஒரு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு அடுத்த நடவடிக்கை என்ன என்பதை அரசியலமைப்பின் 200வது பிரிவு தெளிவாகக் குறிப்பிடவில்லை. பிரிவு 200ன் படி, ஆளுநருக்கு மூன்று செயல் முறைகள் உள்ளன. ஒப்புதல் வழங்கலாம் ஜனாதிபதியின் பரிசீலனைக்காக மசோதாவை அனுப்பலாம், மறுபரிசீலனை தேவைப்படும் அம்சங்களின் செய்தியுடன் கூடிய ஒரு மசோதாவை ஆளுநர் சட்டசபைக்கு திருப்பி அனுப்பலாம். திருத்தங்களுடனோ அல்லது இல்லாமலோ மசோதாவை மீண்டும் சட்டசபை நிறைவேற்றினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கட்டுப்படுவார் என்றும் விதி 200 கூறுகிறது. ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக அறிவித்தால், அந்த மசோதாவை சட்டசபைக்கு திருப்பி அனுப்புவாரா என்பதில், குழப்பம் நிலவியது.
தமிழ்நாட்டிலும் இது தொடர்பாக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சட்டமன்றம் இயற்றும் மசோதாவை ஆளுநர் தடுத்து வைப்பது, சட்டமன்றச் செயல்முறையை தடம் புரளச் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல் ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று வெறுமனே அறிவிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை முடக்குவது அத்தகைய நடவடிக்கையானது, பாராளுமன்ற ஆட்சி முறையின் அடிப்படையிலான அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்படாத மாநிலத் தலைவராக ஆளுநருக்கு சில அரசியலமைப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், மாநில சட்டமன்றங்களால் சட்டமியற்றும் வழக்கமான போக்கைத் தடுக்க இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது. பாராளுமன்ற ஜனநாயக வடிவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உண்மையான அதிகாரம் உள்ளது என தெளிவுபடுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்.