கத்தாரில் எட்டு முன்னாள் கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இந்திய அரசின் மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கத்தார் நாட்டில் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 8 இந்தியர்கள் உளவு பார்த்ததாகப் புகார் எழுந்தது. கடந்தாண்டு இந்த குற்றச்சாட்டில் எட்டு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்தியக் கடற்படையின் முன்னாள் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கத்தாரில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசியத் தகவல்களை இஸ்ரேலுக்கு அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த 8 பேரும் கைதான நிலையில், இது தொடர்பான வழக்கு கத்தார் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்கிடையே கடந்த மாதம் இறுதியில் 8 பேருக்கும் மரண தண்டனை வழங்கி கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அப்போதே இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அந்த 8 பேரையும் இந்தியாவுக்கு அழைத்து வருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. இதற்கிடையே கத்தாரில் 8 இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு ஏற்கப்பட்டது. இந்திய அரசு மேல்முறையீட்டு மனுவை ஆய்வு செய்து வருவதாகவும் அது விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கத்தார் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை சார்பில் கூறுகையில், “இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் ரகசியமானது. அதைப் பொதுவெளியில் வெளியிட முடியாது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்டப்பூர்வமான ஆலோசனை பெறப்பட்டது. அனைத்து ஆப்ஷன்களையும் ஆராய்ந்த பிறகு மேல்முறையீடு செய்தோம். இந்த விவகாரத்தில் கத்தார் அதிகாரிகளுடன் தொடர்பில் தான் இருக்கிறோம்” என்றார். அங்கே சிறையில் இருக்கும் இந்த 8 இந்தியர்களுக்கும் தேவையான அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் அரசு அளிக்கும் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.