விடுதலைப் புலிகள் கொடியை சீமான் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்: திருமுருகன் காந்தி!

விடுதலைப் புலிகள் கொடியை சீமான் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று மே 18 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

சென்னையில் தமிழ்த் தேசிய கூட்டணி உருவாக்கம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் திருமுருகன் காந்தி கூறியதாவது:-

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பிரபாகரன் ஆகிய 3 தலைவர்களையும் பல்வேறு இயக்கங்கள் ஆதர்சன தலைவர்களாக கொண்டிருக்கின்றனர். ஆனால் சில சக்திகள் இந்த தலைவர்களையும் ஒருவருக்கு ஒருவரை எதிராக நிறுத்துகின்றனர். தமிழ்த் தேசிய பிரச்சனைகளை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கி உள்ளோம். நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அடையட்டும்.. சீமான் முதல்வராக இருக்கட்டும்.. நாங்கள் வாழ்த்துகிறோம். ஆனால் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை இந்திய அளவில் கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டாமா? இல்லையா? இந்திய அளவில் கொண்டு போன வைகோவை சீமான் கட்சியினர் கொச்சைப்படுத்தினர். விடுதலைப் புலிகளின் சின்னத்தையும் கொடியையும் எடுத்துக் கொண்டனர் சீமான் கட்சியினர். எந்த ஒரு இழப்பும் செய்யாமலேயே புலிகளின் கொடியை எடுத்துக் கொண்டனர் நாம் தமிழர் கட்சியினர்.

விடுதலைப் புலிகளின் வரலாறு எங்களுடையது; விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவே நாங்கள்தான் என்கிறீர்கள். பிரபாகரனுடன் ஒன்றாக இருந்தேன்; சேர்ந்து இருந்தேன்; பயிற்சி எல்லாம் கொடுத்தார் என கதையெல்லாம் பேசுகிறார் சீமான். என் மீது இருக்கிற 50 வழக்குகளில் பாதி ஈழப் போராட்டத்துக்கானவை. சீமான் முதல்வரே ஆனாலும் ஜெயலலிதா போட்ட அதே தீர்மானத்தைத்தான் போட முடியும். முதல்வர்களை உருவாக்கி உருவாக்கி தீர்மானங்களைப் போட வைப்பதா எங்கள் வேலை? ஈழத் தமிழர் பிரச்சனையை திமுக கூட்டணி, திமுகவுக்கு எதிரான கூட்டணி பிரச்சனையாக பார்ப்பது தவறு.

10 ஆண்டுகள் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இல்லையே.. 10 ஆண்டுகளில் சாதித்தீர்களா? 2009-ல் இந்திய அரசின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதால் தவறு செய்தது. இன்றைக்கும் அதைத்தான் சொல்கிறோம். ஆனால் அவர் தமிழர் இல்லை.. இவர் தமிழர் எல்லை என்கிற குற்றச்சாட்டுகள் எதற்கு? இது ஒரு அரசியலா? திமுக கூட்டணியில் இருக்கிற திருமாவளவன் தொடர்ந்துதானே பேசுகிறார். மதிமுக செய்கிறது.. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் செய்கிறார். ஈழப் பிரச்சனை தமிழ்நாட்டு தேர்தல் பிரச்சனை இல்லை.

10 ஆண்டுகள் பெரியார் இயக்க மேடைகளில் ஏறி அரசியலில் அடையாளம் வாங்கிக் கொண்டு அதற்கு அடுத்த 10 ஆண்டுகள் திமுகவுக்காக தேர்தல் பிரசாரம் செய்து அடையாளம் பெற்றுக் கொண்டு அடுத்த 10 ஆண்டுகள் அதிமுகவுக்காக ஓட்டுக் கேட்டுவிட்டு.. இப்போது திராவிடத்தை ஒழிக்கிறேன்.. தனியாக நிற்கிறேன் என யாருக்கு காது குத்துகிறார் சீமான்? உங்களுக்கு வேறு ஒரு லாபம் வந்தால் பிரபாகரனை கொச்சைப்படுத்தமாட்டீர்கள் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது? 15, 20 ஆண்டுகளாக பெரியாரை பேசிவிட்டு அவரை தெலுங்கர் என நிராகரித்தவர் சீமான். நாளை பிரபாகரனை கொச்சைப்படுத்தமாட்டார் என்பது என்ன நிச்சயம்? 14 ஆண்டுகளில் ஈழத்துக்கான ஒரு நகர்வு கூட நடைபெறவில்லை. எல்லோரையும் விமர்சிப்பது கொச்சைப்படுத்துவது என்பதைத் தவிர நாம் தமிழர் கட்சியால் ஒரு நகர்வும் நடக்கவில்லை. ஆகையால்தான் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டணியை உருவாக்கி உள்ளோம். விடுதலைப் புலிகள் கொடியை சீமான் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு திருமுருகன் காந்தி கூறினார்.