சீனாவில் திடீரென சுவாச நோய்ப் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
கடந்த 2019இல் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா ஒட்டுமொத்தமாக உலகைப் புரட்டிப் போட்டது. அதன் பிறகு நாம் அதில் இருந்து மீண்டு வரவே சில ஆண்டுகள் வரை ஆனது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் பொருளாதார இழப்பும் ரொம்பவே அதிகம். கொரோனாவின் தோற்றமே இதுவரை மர்மமாகவே இருந்து வரும் நிலையில், சீனாவில் புதுவித பாதிப்பு பரவ தொடங்கியுள்ளது. சீனாவில் பெய்ஜிங் மற்றும் லியோனிங் ஆகிய இரு பகுதிகளிலும் நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் அங்கே மீண்டும் மருத்துவமனைகளை நோக்கி மக்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் கூட சீனாவிடம் விளக்கம் கேட்டது. இருப்பினும், சீன மருத்துவர்கள் அசாதாரண பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.
சீனாவில் இப்படி சுவாச நோய்ப் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து மத்திய அரசு இப்போது விளக்கம் கொடுத்துள்ளது. சீனாவில் குழந்தைகளிடையே ஏற்பட்டுள்ள H9N2 பாதிப்பு குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இகுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்கள் பாதிப்பு ஆகிய இரண்டாலும் இந்தியாவுக்கு ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு.. எதாவது சிக்கல் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்க இந்தியா தயாராகவே உள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக சுகாதார வட்டாரங்கள் கூறுகையில், “சீனாவில் இப்போது இருக்கும் சூழல் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். எங்களுக்குக் கிடைத்த தகவல்களை வைத்து பார்க்கும் போது, அவை வைரஸ்களின் காக்டெய்ல் போல இருக்கிறது. இதுவே சீனாவில் அதிகப்படியான பேருக்குப் பாதிப்பு ஏற்படக் காரணமாக இருக்கிறது. கொரோனா வைரஸ் போல இது ஜூனோடிக் வைரஸ் இல்லை” என்றார். அதாவது ஒரு வைரசால் மட்டும் சீனாவில் திடீரென நிமோனியா பாதிப்பு அதிகரிக்கவில்லை. பல வகை வைரஸ்கள் ஒரே நேரத்தில் பரவுவதே இதற்குக் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அதாவது கோவிட் 19ஐ ஏற்படுத்திய கொரோனா வைரஸ் என்பது விலங்கிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவிய ஒரு வைரஸ் ஆகும். அதைத்தான் ஆய்வாளர்கள் ஜூனோடிக் வைரஸ் என்று அழைக்கிறார்கள். சீனாவில் இப்போது திடீரென நிமோனியா பாதிப்பு அதிகரித்த நிலையில், எங்கு மீண்டும் கொரோனாவை போன்ற பாதிப்பு ஏற்படுமோ என்று ஆய்வாளர்கள் அஞ்சினர். இருப்பினும், அவை கொரோனா போன்றது இல்லை என்று இப்போது மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளது.