தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து, சைபர் பாதுகாப்பு பிரிவுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் சட்டசபை குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்ட நோக்கம் பற்றியும் அதன் பின்னணி குறித்தும் மேலும் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த அடுத்த வருடமே அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உருவாக்க வேண்டுமென்று தான் ‘தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005’ கொண்டு வந்தது. பா.ஜ.க.வின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் தனக்கு தலைவலியாக இருந்த அனைத்து அமைப்புகளையும் தனது பெரும்பான்மை பலத்தின் மூலம் பலவீனப்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தகவல் ஆணையமும் தப்பவில்லை.
‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ மக்களுக்கு அதிகாரம் அளிக்கின்றது. தலைமை தகவல் ஆணையர்தான் இந்தச் சட்டத்தை பாதுகாக்கும் இறுதியானவர். ஆனால், அத்தகையவரின் பதவி காலம் மற்றும் சம்பளம் குறித்து முதன்முதலில்; சட்டத்திருத்தம் செய்து, மிகப்பெரிய விமர்சனத்தை எதிர்கொண்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை, வருமான வரி, விசாரணை பிரிவு உள்ளிட்ட 26 பிரிவுகளுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்து திருத்தம் மேற்கொண்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து, தற்போது சைபர் பாதுகாப்பு பிரிவுக்கும் விலக்கு அளித்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
மக்களின் கேள்வி கேட்கும் திறனை ஊக்குவிக்கும் சட்டங்கள் மூலம் தனது அரசின் தவறான நோக்கங்கள் அம்பலப்பட்டுவிடும் என்பதற்கு பயந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிறது ஒன்றிய அரசு. ஊழலற்ற ஆட்சி என்று மேடை தோறும் பொய்யாக, வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி, இந்த சட்டத்தை பலப்படுத்தியிருக்க வேண்டும். மாறாக, அவற்றை அழிக்க பா.ஜ.க. அரசு நினைக்கின்றது. நாட்டின் மக்கள் பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.