தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் பிரதமர் மோடி!

இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்திருக்கிறார்.

பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் மையத்தில் ஆய்வு செய்த பின் அவர் விமானத்தில் பறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தேஜஸ் விமான பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நமது உள்நாட்டு உற்பத்தி திறன்கள் மீதான எனது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.மேலும் நமது சுயசார்பு திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது” என்று எக்ஸ் சோஷியல் மீடியா தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எச்ஏஎல் தேஜஸ் விமானம் ‘லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட்’ (LCA) என்றும் குறிப்பிடப்படுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் மற்ற போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் எடை குறைவானதாகும். இது கடற்படை போர் கப்பல்களிலிருந்த இயங்கும் திறன் கொண்டது. இந்த வகை விமானங்கள் ஒலியை விட 1.6 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும். அதாவது மணிக்கு 1,975 கி.மீ., வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த விமானம் முதலில் லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இதற்கு தேஜஸ் என பெயரிட்டார். இந்த வகை விமானங்களையும், அதற்கு தேவையான உதிரி பாகங்கள், எந்திரங்களை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த விமானம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

முதலில் ஒரு இருக்கை மட்டுமே கொண்டு தேஜஸ் விமானங்கள் வடிவமைக்கப்பட்டன. தற்போது இரண்டு இருக்கைகள் கொண்ட விமானங்களை எச்ஏஎல் தயாரித்து கொடுத்திருக்கிறது. இந்த விமானம் சமீபத்தில்தான் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் தளத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, தேஜஸ் விமானத்தில் பறந்திருக்கிறார்.