ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு சிபிஐ மற்றும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வருமானத்தை மீறி சட்ட விரோத வழிகளில் சொத்துக்களை குவித்ததாக கடந்த 2011 ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி சிபிஐயால் கைது செய்யப்பட்டார். 16 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த ஜெகன் மோகன் ரெட்டி, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தற்போது ஆந்திர முதல்வராக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்பி ரகு ராமகிருஷ்ண ராஜு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா மற்றும் நீதிபதி பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு சிபிஐ மற்றும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 2024 ஜனவரி மாதம் உரிய நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி உத்தரவு பெற்று விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என பதிவாளருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

முன்னதாக, ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை ஐதராபாத் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என ராஜூ தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு சிபிஐ மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மிகவும் தாமதம் ஆவதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்பி ரகு ராமகிருஷ்ண ராஜு தனது மனுவில் கூறியிருந்தார். மேலும் அரசு கருவூலத்திற்கு ரூபாய் 40 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி விட்டு தனது வளத்தை பெருக்கி கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி, தனக்கு எதிரான வழக்கை கிடப்பில் போடுவதை உறுதி செய்து இருக்கிறார். வழக்கில் பயனளிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது” என்று கூறியிருந்தார்.