குஷ்பு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்: வீரலட்சுமி

“தமிழர்களின் பணத்தில் குஷ்பு உப்பு போட்டு சாப்பிட்டது உண்மையாக இருந்தால், கொஞ்சாவது நன்றியுணர்வும், புத்தியும் இருந்திருக்கும்” என்று தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி கூறியுள்ளார்.

த்ரிஷா – மன்சூர் அலிகான் விவகாரத்தில் பொங்கியெழுந்த பாஜக நிர்வாகி குஷ்பு, தானாக சென்று சர்ச்சையில் சிக்கிவிட்டார். த்ரிஷாவை மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து குஷ்பு ஓர் டுவீட்டை வெளியிட, அதற்கு கீழே பலரும் அவரை கழுவி ஊற்ற ஆரம்பித்தனர். இதற்கு முன்பு பெண்களை இழிவாக பேசிய பாஜக தலைவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட சம்பவத்தில் நீங்கள் ஏன் பொங்கவில்லை என்ற ரீதியிலும் பலரும் கேள்வியெழுப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த குஷ்பு, அவர்களை திட்டி வெளியிட்ட பதிவில் ஒரு இடத்தில் ‘ உங்கள் சேரி மொழி’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதையடுத்து, தாழ்த்தப்பட்ட மக்களை குஷ்பு இழிவுப்படுத்திவிட்டதாக அவருக்கு எதிராக கண்டனங்கள் எழத் தொடங்கின. இதனால் மிரண்டு போன குஷ்பு, “சேரி என்றால் பிரெஞ்சு மொழியில் அன்பு என்று அர்த்தம். அந்த அர்த்தத்தில் தான் அப்படி கூறினேன்” என்று எதை எதையோ சொல்லி சமாளிக்க பார்த்தார். ஆனால், தற்போது அதை வைத்தே குஷ்புவை நெட்டிசன்கள் வைத்து செய்ய தொடங்கிவிட்டனர். குஷ்பு என்ற பெயருக்கு முன்பு ‘சேரி’ என்ற அடைமொழியையே நெட்டிசன்கள் அவருக்கு வைத்துவிட்டனர். கேட்டால், ‘அன்பான குஷ்பு’ என்பதையே பிரெஞ்சு மொழியில் சொல்லியதாக அவரை சீண்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

குஷ்பு அவர்களே.. நீங்கள் தமிழ்நாட்டு மக்களுடைய பணத்தில் கொஞ்சமாவது உப்பு போட்டு சாப்பிட்டது உண்மையாக இருந்தால், எங்க அம்மா கே.ஆர். விஜயா ஒரு திரைப்படத்தில் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று ஒரு பாடலை பாடி இருப்பார். நீங்கள் அந்தப் பாடல் வரிகளை ஒரு முறையாவது கேளுங்க. அப்போவாச்சி உங்களுக்கு நன்றியும், புத்தியும் வருதானு பார்ப்போம். பச்சோந்தி நிறம் மாறுவதை விட வேகமாக கொள்கை மாறக்கூடியவர் தான் இந்த குஷ்பு.

ஆதி திராவிட மக்களாகிய எங்கள் தொப்புள் கொடி உறவுகளை இழிவு செய்து பேசிய குஷ்பு மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 27-ம் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப் படை சார்பில் புகார் மனு அளிக்க போகிறோம். இவ்வாறு வீரலட்சுமி கூறினார்.