தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதாவின் எந்த வேட்பாளரும் மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகளால் தேடப்படவில்லை. பா.ஜனதா வேட்பாளர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று ப.சிதம்பரம் கூறினார்.
தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் சிலர் மத்திய விசாரணை அமைப்புகளின் விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு எதிராக சோதனை, சம்மன் என விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில், ‘தெலுங்கானா தேர்தலுக்கு மத்தியில் அங்கு போட்டியிடும் 4 காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டும், சோதனை நடத்தப்பட்டும் உள்ளனர். இதில் ஒருவர், கடந்த 1-ந் தேதி காங்கிரசில் இணைந்த பா.ஜனதா தேர்தல் அறிக்கை குழு தலைவர்’ என கூறியுள்ளார்.
மேலும் அவர், ‘எனக்கு தெரிந்த வரை, பா.ஜனதாவின் எந்த வேட்பாளரும் அதிகாரிகளால் தேடப்படவில்லை. அவர்கள் அனைவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்றவர்கள் என்பது வெளிப்படையானது. உண்மையில் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் அவர்கள் மக்களை நேராக சொர்க்கத்துக்கே கொண்டு சென்று விடுவார்கள்’ என கிண்டல் செய்துள்ளார்.