கும்பகோணம் அருகே, வைத்தியர் ஒருவர் இளைஞரை கொன்று புதைத்து நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ள நிலையில், ஏற்கனவே அவருடன் நட்பாக இருந்த ஒருவர் காணாமல் போனது தொடர்பாகவும், இதற்குப் பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் ஜவாஹிருல்லா.
சோழபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான அசோக் ராஜன் என்பவர் கடந்த 13ஆம் தேதி மாயமானார். இவர் கடைசியாக சந்தித்த நபர் அப்பகுதியைச் சேர்ந்த சித்த வைத்தியர் கேசவமூர்த்தி என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கேசவ மூர்த்தியை போலீசார் விசாரித்தனர். அதன் பின் அசோக் ராஜன் எழுதியதாக கடிதம் ஒன்று, போலீசாருக்கு கிடைத்தது. அதில் தனக்கு ஆண்மைக்குறைவு இருப்பதால் வாழ பிடிக்கவில்லை என அசோக் ராஜன் தெரிவித்திருந்தார். இதையே கேசவமூர்த்தியும் காவல்துறை நடத்திய விசாரணையின் போது கூறியிருந்தார். சந்தேகத்தின் பேரில் கேசவ மூர்த்தியிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, கேசவமூர்த்தி தனது இரண்டு மனைவிகளையும் விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், அப்பகுதி இளைஞர்கள் பலருடனும் நட்பாகப் பழகி, அவர்களை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தி வந்ததாகவும் தெரியவந்தது. அசோக் ராஜனை தனது பாலியல் தேவைக்கு உட்படுத்தும் நோக்கில் அதிக போதை மருந்து கொடுத்துள்ளார். இதில் அசோக் ராஜன் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இறந்துபோன அசோக் ராஜன் உடலை பல பாகங்களாக வெட்டி தனது வீட்டின் பின்புறத்தில் புதைத்ததாகவும் சித்த வைத்தியர் கேசவமூர்த்தி விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார். கேசவ மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர், அவரது வீட்டின் பின்புறத்தில் குழி தோண்டி ஆய்வு செய்தனர். அப்போது மேலும் சில மனித எலும்பு துண்டுகள் கிடைத்துள்ளன. அவை யாருடையவை என்பதை அறிய அந்த எலும்புகளை டி.என்.ஏ ஆய்வுக்காக, மருத்துவ ஆய்வுக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். சோழபுரம் பகுதியில் ஏற்கனவே மாயமான இளைஞர்கள் தொடர்புடைய வழக்குகளையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், குற்றச் செயல்களை செய்வதற்கு கேசவராஜுக்கு பின்னணியில் யாரேனும் இருக்கலாம் என்பதாக எழுப்பப்படும் சந்தேகத்தின் கோணத்திலும் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சோழபுரம் பேரூராட்சி அருகிலுள்ள மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த அசோக் ராஜ் என்ற வாலிபர் சோழபுரத்தைச் சேர்ந்த போலி சித்த மருத்துவர் என்று கூறப்படும் கேசவமூர்த்தி என்பவரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட அசோக் ராஜ் உடலை கேசவமூர்த்தி தனது வீட்டிலேயே புதைத்து விட்டு மறைக்க முயன்றுள்ளார் என்பதும் அவரது உடல் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்ட நிலையில் காவல்துறை கண்டெடுத்துள்ளது என்பதும் கேட்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கம்பக்கத்தில் வீடுகள் நிறைந்துள்ள குடியிருப்பு பகுதியில், அதிகமாக மக்கள் வந்து செல்லும் கோவிலுக்கு அருகில் பெரும் மாபாதக செயலை துணிச்சலாக கேசவமூர்த்தி செய்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் கேசவராஜுடன் நட்பாக இருந்ததாக கூறப்படும் சோழபுரத்தைச் சேர்ந்த முஹம்மது அனஸ் என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக முஹம்மது அனஸின் தாயார் சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த இளைஞரையும் கேசவமூர்த்தி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. இது போன்ற குற்றச்செயல்களை செய்வதற்கு கேசவமூர்த்திக்கு பின்னணியில் யாரேனும் இருக்கலாம் என்பதாக எழுப்பப்படும் சந்தேகத்தின் கோணத்திலும் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும். எனவே, அசோக் ராஜ் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
மேலும், கொல்லப்பட்ட அசோக் ராஜ் தனது தாயார் மற்றும் பாட்டி ஆகியோருக்கு ஒரே நம்பிக்கையாக இருந்துள்ளார். இவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் காணாமல் போன இளைஞர் முஹம்மது அனஸ் தொடர்பான வழக்கில் விரைவான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.