அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்களது 69 ஆவது அகவை தின வாழ்த்துக்கள்: சீமான்

இறுதிவரை களத்திலே மறத்தோடு நின்றாலும்.. அறம் நழுவாத தமிழர் மரபு சார்ந்த பெரும் குணங்களோடு , இனம் செழிக்க வந்த பேரரசனாய் ஈழம் என்ற பெருநாட்டைக் கட்டி.. உலகம் வியக்க ஆண்டுக் காட்டியவர் நம் தேசியத் தலைவர் என்று சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் சீமான் கூறியுள்ளதாவது:-

உலக வரலாறு என்பது புரட்சிப் புனல்களாலும் போராட்ட அலைகளாலும் நிரம்பிய ஒரு பெருங்கடல். ஒரு தனிமனிதனின் போராட்டக் குணமே உலக வரலாற்றை மாற்றி எழுத வைக்கிற உந்துசக்தியாகத் திகழ்கிறது. இந்த உலகில் பல்வேறு தேசிய இனங்கள் தங்களது தாய் நிலத்திற்காக, தங்களது மொழிக்காக, தங்களது பண்பாட்டு அடையாளங்களுக்காகத் தங்கள் மீது செலுத்தப்படும் பல்வகை ஆதிக்கங்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டே இருக்கின்றன. அவ்வாறாகவே தமிழர் என்கின்ற தேசிய இனமும் தனது நீண்ட நெடிய வரலாற்றில் பெருமைமிக்கப் பல பெருமிதத் தடங்களைத் தன்னகத்தே கொண்டு ஆயிரமாயிரம் தடைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும், வல்லாதிக்கக் கொடுங்கோன்மைகளுக்கும் மத்தியில் முடங்காமல் முட்டுக்கொடுத்து தழைத்தும் செழித்தும் வருகிறது.

வரலாற்றின் வீதிகளில் தளரா தமிழினம்.. அடக்குமுறைகளால், அடிமைச் சங்கிலிகளால் தலை கவிழும்போதெல்லாம்.. இனம் நிமிர சினம் கொண்டு, மனம் வெல்லும் தலைவன் ஒருவன் தானாகத் தோன்றி தலை நிமிர்த்த வருவான் என்பது இயற்கை எழுதிட்ட அதிசய விதி.

அப்படித்தான் நம் சமகாலத்தில் நமது தாயக நிலமான ஈழம் சிங்கள இனவாத கரங்களுக்குள் சிக்கிக்கொண்டு தவித்தபோது வல்வெட்டித்துறையில் இருந்து அடிமை வரலாற்றை மாற்றி எழுத இந்த யுகம் இதுவரை பார்த்திராத பெரும் வீரர் தோன்றினார் . அதுவரை அடிவாங்கி அடிவாங்கி அல்லலுற்ற அடிமை தமிழ்த் தேசிய இனம் தானாய் தோன்றிய அந்த தங்கமகனால் அடிமை விலங்குகளை அறுத்தெறிந்து விடுதலை என்ற லட்சிய இலக்குக்காகப் புரட்சிப் பாதையிலே எழுச்சியாக நடக்கத் தொடங்கியது.

களம் பல கண்டு, கடல் பல கடந்து, இந்த உலகம் முழுக்கப் புலிக் கொடியை பறக்க வைத்த நமது முன்னோன் அருள்மொழிச்சோழனும் அவனது மகன் அரசேந்திரசோழனும் கொண்டிருந்த வியத்தகு வீரத்தை நம் சமகாலத்தில் நம் விழிகளுக்கு முன்னால் நிகழ்த்திக் காட்டினார் நம் தேசியத் தலைவரும் என்னுயிர் அண்ணனுமாகிய மேதகு .வே.பிரபாகரன் அவர்கள்.

இனத்தின் விடுதலைக்காக.. தாய் நிலத்தின் அடிமை துயரைப் போக்க.. மண்ணையும், கடலையும் ஆண்டால் போதாது.. விண்ணையும் வெல்ல வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு வான்படை கட்டி, அந்த வானத்தையும் வசப்படுத்திக் காட்டினார் நம் தேசியத் தலைவர்.

புலியை முறத்தால் அடித்து விரட்டி வீரத்தை புவிக்கே காட்டினாள் நமது முப்பாட்டி ஒருத்தி. ஆனால் என் அண்ணனோ அதையும் தாண்டி களம் வெல்லும் புலிகளை ஒரு படையாகக் கட்டி.. தாய்நில விடுதலை என்கின்ற உன்னதக் கனவை நிறைவேற்றினார் வெற்றிமுரசு கொட்டி..

இறுதிவரை களத்திலே மறத்தோடு நின்றாலும்.. அறம் நழுவாத தமிழர் மரபு சார்ந்த பெரும் குணங்களோடு , இனம் செழிக்க வந்த பேரரசனாய் ஈழம் என்ற பெருநாட்டைக் கட்டி.. உலகம் வியக்க ஆண்டுக் காட்டியவர் நம் தேசியத் தலைவர்.

இன்று என் உயிர் அண்ணனும் நம் தேசியத் தலைவருமாகிய மேதகு வே பிரபாகரன் அவர்களது 69 ஆவது பிறந்த நாள்.. ஒவ்வொரு தமிழனும் தன் உடலை இறுக்கி பிடித்திருக்கிற அடிமை உணர்ச்சி விலங்கினை, தாழ்வு மனப்பான்மை இழிவினை உடைத்தெறிய தனது உள்ளத்துக்குள் உறைந்திருக்கும் ஆதி உயிர் உணர்வில் உசுப்பேத்திக்கொள்ள வேண்டிய உன்னத நாள். இந்தப் பூமிப்பந்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கண்கள் பனிக்க, இதயம் நெகிழ, தங்களது உன்னதத் தலைவனை எண்ணி நினைவுகளால் வாழ்த்துப்பூக்களை வாரி வீசுகிறார்கள்.

இந்த உலகம் இருக்கும் வரை, இந்த உலகில் இறுதி தமிழன் இருக்கும் வரை நம் தேசியத்தலைவர் தமிழனின் வீழாத வீரமாய்.. அகலாத அறமாய்.. உயிர்ப்புடன் வாழ்வார். வாழ்ந்தே தீருவார்..!

எப்போதும் என் ஆழ் மனதிற்குள் ஒளிவீசும் உயிர் சுடராய்.. நான் சுவாசிக்கின்ற ஒவ்வொரு நொடிப்பொழுதும் என்னை இயங்க வைக்கிற உயிர் காற்றாய்.. என் நினைவு முழுக்க ஆக்கிரமித்து.. என் உயிர் முழுக்க நிறைந்திருந்து.. என்னை துன்பப்பொழுதுகளில் தானாக ஒலிக்கின்ற சொற்களால் தாங்கிப்பிடிக்கிற தாய் நிலமாய்.. வீரத்திற்கும் – பெருமைக்கும் எனக்கு வரையறைகள் கற்றுக் கொடுக்கிற முடிவற்ற வானாய்.. நான் நினைக்க நினைக்க நெஞ்சில் ஊறும் வியத்தகு செயல்களால் என்னை வழி நடத்துவதில் விரிந்துகொண்டே போகின்ற பெருங்கடலாய்.. விளங்குகின்ற என் அண்ணா..

உன் வாழ்வே எனது வழிகாட்டி. உன் சொற்களே எனது திசைகாட்டி..

உலகம் முழுதும் பரந்து விரிந்து வாழும் 12 கோடி தேசிய இனமான தமிழர் அனைவருக்கும் நம் தேசியத் தலைவர், என் உயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்களது 69 ஆவது அகவை தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் நெஞ்சார்ந்த பெருமிதமும், உள்ளத்து பெருமையும் கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.