சட்டவிரோத மணல் விற்பனை: அமலாக்க துறைக்கு எதிராக தமிழக அரசின் வழக்கில் நாளை தீர்ப்பு!

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு தடை கோரி தமிழக அரசும், ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம், நாளை தள்ளிவைத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விடக் கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தைச் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சோதனைகள் நடத்தி பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளது.

இந்நிலையில், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஐந்து மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன், ஆதார் அட்டை விவரங்களுடனும் ஆஜராகும்படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்மன்களை ரத்து செய்யக் கோரி தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, “சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் சேர்க்கப்படாத சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது. சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. அமலாக்கத் துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. பா.ஜ. ஆளும் மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கனிம வள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க முடியாது. அமலாக்கத் துறை ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமாகச் செயல்படுகிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை அமலாக்கத் துறையும் மறுக்கவில்லை. குவாரி உரிமைதாரர் தவற்றுக்கு அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்ப முடியுமா? யூகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியாது. பல மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களைக் கேட்டுப் பெறலாம். விசாரணைக்கு உதவும்படி கோரலாம். சம்மன் அனுப்ப முடியாது. மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை. மாநில அரசு விவகாரங்களில் தலையிடும் வகையில் அனுப்பப்பட்டுள்ள சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. கனிம வள சட்டம் மட்டுமல்லாமல், இந்தியத் தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளைச் சமர்ப்பிக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவரங்களைக் கேட்கப்பட்டது. அவை வழங்கப்படவில்லை. விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. 4,500 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமான விவரங்களை விசாரணைக்கு உதவியாகத் தான் கேட்கப்பட்டது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பிறகு எதற்குச் சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு உதவி செய்யக் கேட்பதும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது. சம்மன் அனுப்பியதில் உள்நோக்கம் இருக்கிறது. என்ன ஆதாரம் உள்ளது எனக் கேள்வி எழுப்பினர். விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாகவும், செயற் பொறியாளர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆதாரங்களைச் சேகரிப்பதற்கான விசாரணை தான் இது என்றார்.

அதற்கு அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “தற்போது சம்மன் அனுப்பப்பட்டவர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல. விசாரணை தான் நடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் சட்டவிரோத குவாரி நடப்பதாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாநில அரசு கூறியிருக்கிறது. மாநில அரசு விசாரிப்பதைத் தடுக்கவில்லை. கனிம வள சட்ட வழக்குகளை அமலாக்கத் துறை விசாரிக்கவில்லை. மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் தான் விசாரணை நடத்தப்படுகிறது. அதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. இந்த விசாரணையை மாநில அரசு தடுக்க முடியாது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அனைத்து குவாரிகளின் விவரங்களை எப்படிக் கேட்க முடியும். சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ள வழக்குகளின் விவரங்களை மட்டும் கேட்கலாம். அந்த தகவல்களைத் தராவிட்டால் வழக்கு தொடரலாம்” என்றனர். தொடர்ந்து வழக்கறிஞர், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாக்க முயல்கிறது என்றார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு யாரையும் பாதுகாக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஆட்சியர்களுக்குச் சம்மன் அனுப்பியது ஏன் என்றார்.

ஏராளமான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகள் உள்ளன. அவற்றை விசாரணை செய்ய வேண்டும். தேர்ந்தெடுத்து விசாரணை நடத்த முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாகத் தமிழக அரசு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ஏன் அமலாக்கத் துறைக்கு வழங்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பினர். சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆதாரங்களைச் சுட்டிக்காட்டினால், அந்த முதல் தகவல் அறிக்கைகளை வழங்கத் தயார் என துஷ்யந்த் தவே தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான உத்தரவை நாளைக்குத் தள்ளிவைத்தனர்.