செந்தில் பாலாஜிய பார்த்தா கஷ்டமா தான் இருக்கு: வானதி சீனிவாசன்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், இதுதொடர்பாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்கத் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அந்த சமயத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக ஓமந்தூரார் அரசினர் தோட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், உடனடியாக இதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னை காவேரி மருத்துவமனையில் ஜூன் 22ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு மேல் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி, அங்கிருந்து ஜூலை 17ஆம் தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்படவில்லை. அங்கு அவருக்கு அடிக்கடி கால் மறுத்துப் போதல் பிரச்னை உண்டானதால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றார்.

இதனிடையே கடந்த 15ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு சிறையில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட சோதனைகளில் மூளையில் சிறிய பாதிப்பு இருப்பதும், கணையத்தில் பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரப்படுமா என்பது விரைவில் தெரிய வரும்.

இந்நிலையில் தான் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலம் குறித்து கேள்வி எழுப்பப்ட்டது. நேற்று கோவை கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் மண்டல் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் 107வது மனதின் குரல் நிகழ்ச்சியை வானதி சீனிவாசன் எம்எல்ஏ கேட்டார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வானதி சீனிவாசன், ‛‛அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை அடிக்கடி மோசமாகி கொண்டிருக்கிறது என்பது ஒரு மனிதாபிமானத்தின் அடிப்படையில் எங்களுக்குமே வருத்தமாகத்தான் உள்ளது. ஒருவேளை சிறைத்துறை சரியாக அவரை கவனிக்கவில்லையா? தமிழக அரசின் கண்காணிப்பின் கீழ்தான் அவர் இருக்கிறார். ஒரு அமைச்சருக்குக்கூட சிறையில் உணவும், மருத்துவ வசதிகளும் சரியாக இல்லாததால்தான், அவருக்கு திரும்பத்திரும்ப உடல்நிலை சரி இல்லாமல் போகிறது என்பது எங்களுக்கு வரக்கூடிய செய்திகளில் இருந்து தெரியவந்திருக்கிறது. ஒருவேளை தமிழக அரசு அவருக்கு சிறந்த மருத்துவத்தையோ, அவருடைய உடல்நிலையையோ கவனிக்க முடியாவிட்டால் மத்திய அரசின் உதவியைக்கூட நாடலாம். எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளுக்குக்கூட அவரை அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கலாம். எனவே, மாநில அரசு அது குறித்தும் யோசிக்க வேண்டும்” என கூறினார்.