அதிமுக தலைமை அலுவலக வன்முறை தொடர்பான புகாரில் எடப்பாடி பழனிச்சாமி மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் இரட்டை தலைமை இருந்தது. ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமியும் இருந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமானது. இதற்கு ஓ பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மாறாக ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11ம் சென்னை வானகரம் திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது, ஓ பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டை அதிமுக அலுவலகம் சென்றார். அப்போது அங்கு ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை உருவானது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சிவி சண்முகம் ராயப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில் அதிமுக தலைமை அலுவலக பூட்டை உடைத்து சொத்து ஆவணங்கள், வாகனங்களின் ஆர்.சி புத்தகங்கள், கம்ப்யூட்டர் உள்பட பல பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்து சென்று விட்டதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் கூறப்பட்டு இருந்தது. மேலும் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் ஜேசிடி பிரபாகர் சார்பில் ராயப்பேட்டை போலீசில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், தங்களை எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கூறப்பட்டு இருந்தது. இந்த மோதல் காரணமாக அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. மேலும் இந்த அதிமுக தலைமை அலுவலக வன்முறை குறித்த புகார்கள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தான் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில் அதிமுக பொதுக்குழுவின்போது அதிமுக தலைமை அலுவலகம் சென்ற எங்களை எடப்பாடி பழனிச்சாமி, சிபி சண்முகம் உள்ளிட்டவர்கள் குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு என்பது இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் தொடர்பாக விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை 2 வாரங்களில் மேற்கொள்ள வேண்டும் என சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அதிரடியாக உத்தரவிட்டார்.