உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப் பாதையில் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள ஒரு சமூக வலைதள பதிவில், “பாபா பவுக் நாக் ஜியின் கருணையினாலும், கோடிக்கணக்கான நாட்டு மக்களின் கருணையினாலும், மீட்புக் குழுவினரின் அயராத உழைப்பாலும் சுரங்கத்துக்குள் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டது. விரைவில் தொழிலாளர் சகோதரர்கள் வெளியே கொண்டுவரப்படுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கத்தில் துளையிடும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக களத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து NHIDCL நிர்வாக இயக்குனர் மஹ்மூத் அகமது கூறும்போது, “பணிகளில் ஏற்பட்டுள்ள தற்போதைய முன்னேற்றத்தை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், தொழிலாளர்கள் வெளியேறுவதற்கான கடைசி பகுதி குழாய் துளைகளின் வழியே உள்ளே செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.
மீட்புப் பணிக்களத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் கயிறு, விளக்குகள், ஸ்ட்ரக்சர்கள் போன்ற உபகரணங்களுடன் சுரங்கத்தின் முன்னால் இருப்பதை காண முடிந்தது. இந்தச் சிக்கலான மீட்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேவையான உபகரணங்களுடன் குழாய் வழியாக மறுமுனைக்கு முதலில் உள்ளே சென்று அங்கு சிக்கியிருக்கும் தொழிலாளர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களின் தற்போதைய நிலையின் ஆய்வு செய்து, பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகளைத் தெரிவிப்பார்கள்.
ஒருங்கிணைந்த மற்றும் விரைவான செயல்முறைக்காக அனைத்து ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பசுமைப் பாதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. வெளியேறும் தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவிகள் விரைவாக கிடைப்பதற்காக ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கான பாதைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. 90 செ.மீ. (3 அடி) அகலமுள்ள குழாயின் வழியாக, சக்கரங்கள் கொண்ட ஸ்ட்ரக்சரின் மூலமாக தொழிலாளர்களை வெளியே கொண்டுவரும் பணிகள் தொடங்கப்பட்டதும் அனைத்து தொழிலாளர்களையும் மீட்க இரண்டு மணி நேரங்களுக்கு மேல் ஆகலாம் என்று மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
முன்னதாக, சுரங்கப் பாதை மணல் குவியலில் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட டெல்லியில் இருந்து 24 சிறப்பு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். மெலிந்த தேகம், உயரம் குறைவான இவர்கள் சமதளம், மலைப்பகுதியில் எலிவளை போல குடைந்து சிறிய அளவிலான சுரங்கம் தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள். இதன் காரணமாக ‘எலி வளை’ தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.