சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால், கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதித்து, மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
செந்தில் பாலாஜி மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் நீதிபதிகள் சதீஷ் சந்திரா, திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பரிசீலனைக்காக செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட சமீபத்திய மருத்துவ அறிக்கைகளை அவர் தரப்பில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று காலை இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சதீஷ் சந்திரா, திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு, “செந்தில் பாலாஜியின் உடலில் இருக்கும் பிரச்சினைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம், மருத்துவக் காரணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. செந்தில் பாலாஜியின் சமீபத்திய மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்தபோதும், உயிருக்கு ஆபத்து இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. (serious or life-threatening). நானும் கூகுள் செய்து பார்த்தேன். இதை குணப்படுத்த முடியும் என்றுதான் கூறப்படுகிறது. மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும்” என்று தெரிவித்தது.
மேலும் செந்தில் பாலாஜி தரப்பில், ”மனுதாரருக்கு பைபாஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜியின் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் சில பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால், brain stroke- க்கை ஏற்படுத்தும்” என்ற வாதத்தை முன்வைத்து வாதிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, கீழமை நீதிமன்றத்தில் சாதாரண ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.