ஈரோட்டில் தலித் இளைஞர்கள் வாயில் சிறுநீர்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

பட்டியலின சமூகத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கை வேண்டும் என காங்கிரஸ் எம்பி செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

சமூகநீதி, அனைத்து மக்களுக்கும் சம உரிமை எனும் கொள்கையை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கையில், இன்னமும் பட்டியல் சமூக மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஏற்கத்தக்கதல்ல என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இப்படி இருக்கையில் ஈரோட்டில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாட்டின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இதற்கு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தலித் சமூக இளைஞர்கள் வாயில் சிறுநீர் கழித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. சாதி ஆதிக்க மனப்பான்மையில் இந்த கொடூரச்செயலை செய்த மனித மிருகங்களை வன்மையாக கண்டிக்கிறேன். தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட போதும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விளிம்புநிலை மக்களை ஒரு மனித உயிரினமாக மதிக்காத சமூகத்தில்தான் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.

தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் இதுபோன்ற அநாகரீக சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது, தேசிய பாதுகாப்புச்சட்டம், எஸ்சிஃஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஐபிசி சட்டபிரிவுகள் 294 மற்றும் 504 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும். மேலும், மாவட்டம் முழுவதிலும் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம்களை அதிகளவில் நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விஷயத்தை கவனத்தில் கொண்டு இதுபோன்ற செயல்கள் இனி நடைபெறாமல் இருக்க, மனித சமூகத்தில் வாழத் தகுதியற்ற வன்கொடுமைக் குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். காயமடைந்துள்ள இளைஞர்களுக்கு மருத்துவ வசதிகளும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.