இலங்கை பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் வீரரான இந்திய வம்சாவளி தமிழர் முத்தையா முரளிதரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவாவில் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக முத்தையா முரளிதரன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட ‘A Legendary 800 – Against All Odds’ படம் தொடர்பான உரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த உரையாடலில் முத்தையா முரளிதரன் கூறியதாவது:-
இலங்கையில் உள்ள பிரச்சினைகளை இந்தியா ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை. இந்தியா என்றால் மத்திய அரசை நான் சொல்லவில்லை, அங்குள்ள உண்மையான பிரச்சனை என்னவென்று தமிழக அரசுக்குப் புரியவில்லை. இலங்கையில் தமிழ்ச் சமூகத்தில் பல குழுக்கள் உள்ளன. சிலர் ஒரு பகுதியைப் பிரித்து ஒரு தனி நாட்டை உருவாக்க விரும்பினர். நாங்கள் தனி நாட்டை விரும்பவில்லை. நாங்கள் அனைவருடனும் இணக்கமாக வாழ விரும்பினோம்.
இந்தியாவில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் இலங்கை பிரச்சினையை புரிந்து கொள்ளவில்லை. எனது தாத்தா இந்தியாவைச் சேர்ந்தவர். 1920களில் தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்றார். ஆங்கிலேயர்கள் எங்களை வலுக்கட்டாயமாக அங்கு அழைத்துச் சென்றனர். அதனால்தான் இலங்கையில் எங்கள் தலைமுறையினர் வாழ்கின்றனர். நாங்கள் அனைவரும் மத்திய மலைநாட்டில் வளர்ந்தவர்கள். இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறோம். அவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் அவர்கள் பேசும் போது, அவர்கள் பேசும் விதம், வேறு, ஆனால் அது ஒரே மொழி
நாங்கள் ஒரு விளையாட்டு வீரரைப் பற்றிய திரைப்படத்தை எடுக்கிறோம் என்று நினைத்தோம். ஆனால் சினிமாவை சினிமாவாக பார்க்கவில்லை. இது ஒரு வகையான பிரசாரம் என்று மக்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு முத்தையா முரளிதரன் கூறினார்.
முத்தையா முரளிதரன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விஜய்சேதுபதி அப்படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.