முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரண வழக்கை கைவிட்டது தமிழக போலீஸ்!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் வழக்கு தொடர்பான விசாரணையை கைவிடுவதாக தமிழ்நாடு போலீஸ் அறிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி அன்று குன்னூர் அருகே M1-17V5 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஹெலிகாப்டர் விபத்தால் ஏற்பட்ட மரணம் தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்த தமிழ்நாடு காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் வழக்கு விசாரணையை கைவிடுவதாக தமிழ்நாடு போலீஸ் அறிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சந்தேக மரணத்தை குறிக்கும் சட்டபிரிவு 174-இன் கீழ் வழக்கு விசாரணையை நடத்தி வந்தது. ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளான நாள் அன்று வானிலை அனுமதி அளிக்கப்பட்டதா என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது. சந்தேகம் தரும் ஆதாரங்கள் ஏதும் இல்லாததால், இந்த வழக்கின் விசாரணையை குன்னூர் போலீசார் நிலுவையில் வைத்து இருந்தனர்.

ஹெலிகாப்டரின் ஃபைட் டேட்டா ரெக்கார்டர், காக்பிட் வாயிஸ் ரெக்கார்டர் கிடைக்காததால் வழக்கு விசாரணை தொடர்ந்து நிலுவையில் இருந்தது. பிபின் ராவத் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட முப்படை விசாரணைக்குழு கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரியில் முதற்கட்ட ஆய்வு அறிக்கையை சமர்பித்தனர். அதில் வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்தான் இந்த விபத்திற்கு காரணம், இயந்திரக் கோளாறோ அல்லது நாசவேலை, அலட்சியமோ காரணம் அல்ல என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

முப்படை விசாரணைக் குழுவின் அறிக்கையை தமிழ்நாடு காவல்துறையும் ஆமோதித்துள்ளது. அடர்ந்த மேகங்கள் பகுதியில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதன் பின்னணியில் எந்த சதியும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில்தான் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணையை கைவிடுவதாக தமிழ்நாடு போலீஸ் அறிவித்துள்ளது.