தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் பெருங்குடியில் பட்டியல் சமூக மக்கள் 5 பேரை, ஆயுதத்தால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 6 வயது சிறுவன் ஒருவரும் இந்த தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது.
வாக்கு அரசியலுக்காக, குற்றவாளிகளுக்கு எதிராக எந்த கடுமையான நடவடிக்கைகளும் எடுக்காமல், தொடர்ந்து சமூகங்களுக்கு இடையே விரோதத்தை மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது தி.மு.க. அரசு. இதனால் பாதிக்கப்படுவது அனைத்து சமூகங்களையும் சேர்ந்த சாதாரண பொதுமக்களே என்பதை முதல்-அமைச்சர் உணர வேண்டும். பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான இதுபோன்ற குற்றச்சம்பவங்களை தி.மு.க. அரசு கண்டும் காணாததுபோல் இருப்பது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனியும் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜனதா சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தனது ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் கனமழை எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தற்போது டெல்டா மாவட்டங்களில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பாதயாத்திரையைத் தொடர்ந்து வந்தார் அண்ணாமலை. இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அந்தமான் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு வெகு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு பாஜக சகோதர சகோதரிகளின் பாதுகாப்பு கருதி, ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது. டிசம்பர் 6 முதல், மீண்டும் நடைபயணம் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். பயண விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.