தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இதனிடையே பல பிரபலங்கள் விஜயகாந்த், விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை செய்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தனர்.
உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக்கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார் என்றும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் விஜயகாந்த் உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக அவருடைய மனைவி பிரேமலதா எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே பல பிரபலங்கள் விஜயகாந்த், விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை செய்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து மிகுந்த கவலையடைந்தேன். அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து, அவர் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு என்னுடைய அன்பையும் ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன்”, என்று கூறியுள்ளார்.
மத்திய இணைமந்திரி எல்.முருகன் இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “தமிழக திரைப்பட முன்னணி நடிகர் மற்றும் தேமுதிக நிறுவன தலைவருமான கேப்டன் திரு.விஜயகாந்த் அண்ணன் அவர்கள் சுவாச பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. கூடிய விரைவில் பூரண குணமடைந்து மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று அதில் மத்திய இணைமந்திரி எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் அமீர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திரையுலகில் நான் கண்ட நல்ல மனிதர்களில் முக்கியமானவரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக இல்லை என்ற தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்றேன். வாடிய பயிரை, பசியினால் இளைத்தோரை, பிணியால் வருந்துவோரை, ஏழைகளாய் உழல்வோரை கண்டுளம் பதைத்த வள்ளலாரைப் போல, நம்மிடையை திகழ்ந்த தன்னலமற்ற மனிதநேயப் பண்பாளரான அவர், இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள, எனும் குறள் வழி வாழ்ந்த ஈகைத் தமிழன், கேப்டன் விரைவில் பூரண உடல் நலம் பெற்று சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் தாளில் இறைஞ்சுகிறேன், என்று கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள பதிவில், ‘அன்புக்குரிய விஜயகாந்த் சார் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்’ என பதிவிட்டுள்ளார்.