2024 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என அதன் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இது பாஜகவின் என்டிஏ தலைமையிலான கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கவும், ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யவும் பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக பாஜக என்டிஏ கூட்டணியை அமைத்துள்ளது. தற்போது இந்த கூட்டணியில் 20க்கும் அதிகமான கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியில் மிகப்பெரிய கட்சியாக அதிமுக இருந்தது. ஆனால் தற்போது பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துள்ளது. மாறாக பாஜகவை இந்த தேர்தலில் வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ எனும் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதில் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட 26 கட்சிகள் உள்ளன.
இந்நிலையில் தான் சில கட்சிகள் பிரதமர் மோடியின் என்டிஏ கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா’ கூட்டணியில் இடம்பெறவில்லை. குறிப்பாக கூற வேண்டும் என்றால் தெலங்கானா முதல்வர் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட சில கட்சிகள் என்டிஏ மற்றும் ‛இந்தியா’ கூட்டணியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய விஷயத்தை கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பலமுனை போட்டி நிலவும். பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பிஜேபிக்கு எதிரான எதிர்ப்பு அலை அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். வேலைவாய்ப்பின்மை, வறுமை, புலம்பெயர்வது உள்ளிட்டவை முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதனால் மக்ள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி தான் விளிம்பு நிலை மற்றும் பின்தங்கிய மக்களுக்கான நம்பிக்கையாக உள்ளது. வரும் காலத்தில் மக்கள் நல்ல முடிவை வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.