வெறுப்புச் சந்தையில் அன்பு எனும் கடையைத் திறப்பதுதான் வளர்ச்சி: ராகுல் காந்தி

வெறுப்புச் சந்தையில் அன்பு எனும் கடையைத் திறப்பதுதான் வளர்ச்சி என்பதே வளர்ச்சி குறித்த எனது பார்வை என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கேரளாவின் நாளிதழான சுப்ரபாதத்தின் 10-ம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. எர்ணாகுளத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது:-

சுப்ரபாதம் நாளிதழ் 10 வருடங்களாக சிறப்பாகப் பணியாற்றியதற்காக எனது வாழ்த்துகள். கேரளாவின் முன்னாள் முதல்வரும், மறைந்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டியால் கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த நாளிதழ். பொய்களை மிக எளிதாகப் பரப்பும் உலகில் நாம் வாழ்கிறோம். ஆனால், இணக்கமான சமூகத்தின் அடித்தளம் உண்மை என்பதை நாம் அனைவரும் அறிவோம். பொய்களைக் கொண்டு ஒரு நல்லிணக்க சமுதாயத்தை உருவாக்க முடியாது. இறுதியில், உண்மை வெளிவந்தே தீரும்.

இந்தியர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள்; ஒருவரோடு ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ எனக்குக் காட்டியது. மிகப் பெரிய நிறுவனங்கள் நடத்தும் ஊடகங்கள் என்ன சொன்னாலும் உண்மை இதுதான். வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறப்போம் என்ற கோஷம் யாத்திரையில் இயல்பாக வெளிப்பட்டது. யாத்திரையின் முழு உணர்வையும் அது பிரதிபளித்தது.

இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது திடீரென ஒருவர் வந்தார். அவர் என்னைச் சுட்டிக்காட்டி, “நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினார். “நான் என்ன செய்கிறேன்?” என்று நான் அவரிடம் கேட்டேன். “நீங்கள் வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறக்கிறீர்கள்” என்று அவர் கூறினார். வளர்ச்சி பற்றிய எனது கருத்துக்களை யாராவது என்னிடம் கேட்டால், வெறுப்பின் சந்தையில் அன்பின் கடைகளைத் திறப்பதுதான் அது என்று நான் கூறுவேன்.

மிகவும் வெறித்தனமான ஆர்.எஸ்.எஸ். நபரிடம் சென்று “வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறப்பது என்றால் என்ன?” என்று கேட்டால், அவரால் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது. அன்புதான் அனைத்துக்கும் ஆதாரம். இது ஒவ்வொரு சமூகத்துக்கும், ஒவ்வொரு மதத்துக்கும், ஒவ்வொரு மொழிக்கும் வேலை செய்கிறது. ஏனெனில் அன்பு உண்மையான உணர்வை அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.