தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஏன் முதலிலேயே குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் அதனை முதலிலேயே அனுப்பி இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த மசோதாக்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்தார். இதையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், தமிழக ஆளுநரின் இந்த நடவடிக்கை குறித்து கவலைகளை வெளிப்படுத்தினர். இதற்கிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருந்த 10 மசோதாக்களை உடனடியாக திருப்பி அனுப்பினார் . இதையடுத்து, தமிழ்நாடு அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டடு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத மசோதாக்களை மீண்டும் கடந்த நவம்பர் 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கே மீண்டும் அனுப்பி வைத்தது.
சிறப்பு சட்டசபை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது ஏற்புடையதல்ல, இந்த சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் அனுமதிக்காக முன்னிடப்படுமாயின், ஆளுநர் அதற்கு அனுமதி அளித்திட வேண்டும் என்றும் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு மாலையிலேயே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கடந்த நவம்பர் 20ம் தேதி மீண்டும் வந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அன்றைய விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடுகையில், ஆளுநர் மசோதாக்களை எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் திருப்பி அனுப்பி இருக்கிறார். ஆளுநரின் ஒவ்வொரு நடவடிக்கையும் சட்டத்தை மீறியதாக இருக்கிறது. ஆளுநர்கள், மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும்; மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்; ஆளுநர் withhold assent என்ற வெறுமனே சொல்ல முடியாது; அதற்கு காரணத்தை குறிப்பிட வேண்டும் என்கிறது அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவு. என வாதிடப்பட்டது.
மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகி வாதிடுகையில், ஆளுநர் என்பவர் வெறும் டெக்னிக்கல் சூப்பர்வைசர் கிடையாது. மொத்தம் 182 மசோதாக்களில் 152 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்துவிட்டார். தற்போது நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க கால அவகாசம் தர வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் தந்தே ஆக வேண்டும் என மறைமுகமாக அழுத்தம் தர முடியாது என வாதிட்டார்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறுகையில், தமிழ்நாடு ஆளுநர் 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை; சட்டசபையில் 2-வது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் மீது ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்பதில் உச்சநீதிமன்றம் காத்திருக்கிறது என்றார். இந்த வழக்கு டிசம்பர் 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல், குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ரவி அனுப்பி வைத்துள்ளதாக தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி கூறுகையில், 2-வது முறையாக சட்டசபையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். ஆனால் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் உள்துறை அமைச்சகம் மூலமாக ஜனாதிபதிக்கு ஆளுநர் ரவி அனுப்பி வைத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இது மசோதாக்கள் மீது ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துகிற முயற்சி. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குழந்தைத் தனமாக உள்ளது என்றார்.
இதனிடையே இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஏன் முதலிலேயே குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் அதனை முதலிலேயே அனுப்பி இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடிய பிறகு மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது ஏன்?. இது தொடர்பாக தலைமை நீதிபதி கூறும் போது, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அப்படியே நிறைவேற்றப்பட்டு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் போது மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்.. மசோதாவை நிலுவையில் வைத்ததாக கூறிய பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநர் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? என தலைமை நீதிபதி கட்டமாக கேள்வி எழுப்பினார்.