தலைமைச் செயலகத்தில் அமலாக்கத் துறை அலுவலக அதிகாரிகள் ரெய்டு நடத்தும் போது அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தக் கூடாதா என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்தார்.
திண்டுக்கல் நியூ அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு. இவர் மீது சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல இருக்க ரூ 3 கோடி கேட்டு மிரட்டி ரூ 20 லட்சத்தை வாங்கிவிட்டு அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி தப்பினார். 15 கி.மீ. தூரம் விரட்டி சென்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் சுமார் 15 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் இரவோடு இரவாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அங்கித் திவாரியை திண்டுக்கல் சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அலுவலக பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. “உரிய அனுமதி பெற்ற பின்னரே சி.ஆர்.பி.எஃப் படையினர் உள்ள செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தமிழ்நாடு காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் 5 மணி நேரமாக வெளியே காத்துக்கொண்டிருந்த அவர்கள், பின்னர் திரும்பிச் சென்றனர்.
சிஆர்பிஎஃப் படையினரை அழைத்ததற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆளூர் ஷாநவாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தலைமைச் செயலகத்தில் ED ரெய்டு நடத்தும்போது, ED அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தக்கூடாதா? சந்தேகத்தின் பெயரில் ED எங்கும் நுழையலாம் எனில், சான்றுகளுடன் லஞ்ச ஒழிப்புத் துறை நுழையக்கூடாதா? லஞ்ச ஒழிப்புத்துறையை துணை ராணுவம் தடுக்கும் எனில், ED-யை போலீஸ் தடுத்தால் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.