தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவானவர்களே உள்ளனர்: அண்ணாமலை

லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது என்றும், தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவானவர்களே உள்ளனர் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து விடுவிக்க அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.3 கோடி வரை லஞ்சம் கேட்டிருக்கிறார். இந்த பேரம் ரூ.51 லட்சத்தில் முடிந்திருக்கிறது. முதற்கட்டமாக ரூ.20 லட்சத்தை அங்கித் பெற்றிருக்கிறார். இரண்டாவது கட்டமாக ரூ.31 லட்சத்தை கொடுக்குமாறு தொடர்ந்து சுரேஷ் பாபுவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் அங்கித். இதனையடுத்து சுரேஷ் பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுரேஷ் பாபுவிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். இந்த ரூபாய் நோட்டுகளை அங்கித் பெற்ற நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில், பிரதமர் அலுவலகத்திலிருந்து சுரேஷ் பாபு மீதான வழக்கை விசாரிக்க உத்தரவு வந்துள்ளதாக கூறிதான் அங்கித் திவாரி லஞ்சம் பெற்றிருக்கிறார். மட்டுமல்லாது, பேரம் பேசும்போது தனது உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து லஞ்ச தொகையை குறைப்பதாகவும் அங்கித் திவாரி கூறியிருக்கிறார். இவை அனைத்தும், அங்கித் திவாரியின் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கலாம் என்கிற சந்தேகத்தை லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு எழுப்பியிருக்கிறது. எனவே நேற்றிரவு அதிரடியாக மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். சுமார் 13 மணி நேரம் நடைபெற்ற ரெய்டில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து அங்கித் திவாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்திய வரலாற்றில் மத்திய விசாரணை அமைப்பின் அலுவலகத்தில் மாநில விசாரணை அமைப்பு ரெய்டு மேற்கொள்வது இதுவே முதல்முறை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, “இந்த விவகாரத்தை அரசியலாக பார்ப்பதைவிட, ஒரு நபர் லஞ்சம் வாங்க முற்பட்டு லஞ்சம் வாங்கியுள்ளார். அவரை கைது செய்திருக்கிறார்கள் என்றுதான் நான் பார்க்கிறேன். இது மிகவும் புரொஃபஷனலா அணுக வேண்டிய விஷயம். இதற்காக மொத்த அமலாக்கத்துறை மீதும் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை. அமலாக்கத்துறை மீது தவறு இல்லை. மனிதர்கள் செய்யும் தவறுக்கு அமலாக்கத்துறை மீது தவறு சொல்ல முடியாது. தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் வாங்குபவர்களை கைது செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு முழு அதிகாரம் இருக்கிறது. எனவே இதை அரசியலாக பார்க்கக்கூடாது. ஆனால் இது அரசியல்வாதிகளுக்கு புரியாது. தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவானவர்களே உள்ளனர். மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகளை வைத்து தமிழகம் வாழ்ந்து கொண்டிருப்பது சாபக்கேடு” என்று விமர்சித்துள்ளார்.