இது தற்காலிக பின்னடைவே.. மக்களவைத் தேர்தலுக்கு தயாராவோம்: மல்லிகார்ஜுன கார்கே!

“தற்காலிக பின்னடைவில் இருந்து மீண்டெழுந்து, மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுவோம்” என்று 4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து வெளியிட்ட பதிவில், “தெலங்கானா மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மூன்று மாநிலங்களிலும் எங்கள் கட்சியின் செயல்பாடு ஏமாற்றம்தான் அளிக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இருந்தாலும், இந்த மூன்று மாநிலங்களிலும் மீண்டும் புத்துயிர் பெறுவோம். தற்காலிக பின்னடைவில் இருந்து மீண்டெழுந்து, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு இண்டியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தயாராகுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சி உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியோ தெலங்கானாவில் மட்டுமே தடம் பதித்துள்ளது.

இந்நிலையில் இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் டிச.6 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் டிசம்பர் 6-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருப்பதாகவும், கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், இண்டியா கூட்டணியின் இந்தக் கூட்டம் முக்கியம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.